பால்புதுமையினர் (LGBTQIA+) மீதான வெறுப்பை மருத்துவக் கல்வி மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது – எம்.பி.பி.எஸ் கல்வித்திட்டத்தைப் புதுப்பிக்க வேண்டும்
மருத்துவக் கல்வித்திட்டங்கள் பால்புதுமையினருக்கெதிரான வெறுப்பையும் பிரிவினையையும் உறுதிப்படுத்துகின்றன என்றும், அவற்றில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்றும் செவ்வாய்க்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துலள்ளது.
திருநர்களுக்குத் தரப்படும் பல்வேறு உடல்நல மற்றம் மனநலம் சார்ந்த சிகிச்சை முறைகள் பால்புதுமையினரை “குணப்படுத்தும்” சிகிச்சைகளின் (Conversion Therapy) வேற்றுவடிவங்களாகவே இருக்கின்றன என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“சம்பந்தபட்ட மனநல மருத்துவருக்கு ஏன் இதுபற்றித் தெரிவதில்லை? இதற்கு அவரது மருத்துவப்படிப்பின் கவ்லித்திட்டமே காரணம். அதைப் புதுப்பித்து இந்த காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கவேண்டும். ஒரு மருத்துவரின் கல்விக்காலம் முழுவதிலுமே பால்புது வெறுப்பு நியாயப்படுத்தப்படுகிறது. அவர் ஒரு மனநல அல்லது உடல்நல மருத்துவராக மாறும்போது பால்புதுமையினரும் அவரிடம் சிகிச்சைக்கு வரலாம்” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது
தங்கள் உறவினர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் என்று ஓர்பாலீர்ப்பு கொண்ட இரு பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது தொடர்பான வழக்கின்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. ஜூன் 7ம் தேதி, காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட மாநிலத் துறைகளும் சமூகத்தினரும் பால்புதுமையினர் பற்றிய முன்முடிவுகளைக் கைவிடுவதற்காகவும் அவர்களை மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காகவும் என்னென்ன செய்யலாம் என்று நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் பால்புதுமையினர் பற்றிய புரிந்துணர்வை ஊக்குவிக்கும் பாடங்கள் சேர்க்கப்படவேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரை செய்திருந்தனர்.
பால்புதுமையினரின் பாலீர்ப்பை “குணப்படுத்துவதற்காக” செய்யப்படும் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள முயற்சி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. செவ்வாய்க்கிழமை நடந்த வழக்கு விசாரணையின்போது, மருத்துவர். த்ரிநேத்ரா ஹால்தர் கும்மாராஜு சமர்ப்பித்த அறிக்கை ஒன்றை நீதிமன்றம் மேற்கோள் காட்டியது. அதில், எம்.பி.பி.எஸ் கல்வித்திட்டத்தின் ஒரு அங்கமான தடயவியல் பாடத்தில், ஆண்கள் மற்றும் பெண்களின் ஓர்பால் புணர்ச்சியும் வாய்வழிப் புணர்ச்சியும் பாலியல் குற்றங்களாக விவரிக்கப்பட்டுள்ளதையும், மாற்றாடை அணிவது (Cross dressing) பாலியல் வக்கிரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக த்ரிநேத்ரா தெரிவிக்கிறார்.
“ஒரு வாதியின் வழக்கை எடுத்துக்கொண்டு நீதிபதியோ வழக்கறிஞரோ, தன் சொந்த விருப்பு வெறுப்புகள் மற்றும் முன்முடிவுகளை விட்டுவிட்டு முடிவுகள் எடுப்பது எவ்வளவு அவசியமோ, உடல் நலம் மற்றும் மனநல மருத்துவர்களும் தங்களிடம் சிகிச்சைக்கும் வருபவர்களின் பாலினம் மற்றும் பாலீர்ப்பு தொடர்பான அறம்சார்ந்த தன்னிலை முன்முடிவுகளைக் கைவிடுவது அதை விட அவசியமானது” என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நபரின் பாலின அடையாளமோ பாலீர்ப்போ உடல்நலப் பிரச்சனைக்கான சிகிச்சைக்கு முக்கியமானது என்றால் அது தேவைதான். ஆனால், அந்த சிகிச்சை, பாலினம் அல்லது பாலீர்ப்பை “குணப்படுத்துவதாக” இருக்கக்கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஒரு மனநல மருத்துவரால் ஒருபாலீர்ப்புடைய ஆண் ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்துச்சீட்டை உதாரணம் காட்டிய உயர்நீதிமன்றம், ஸ்டிமுலி காப்ஸ்யூல் மற்றும் ஃப்ளூவோசெட் காப்ஸ்யூல்கள் 15 நாட்களுக்கு வழங்கப்பட்டதாகவும், இதைத் தவிர அறிவாற்றல் நடத்தை சிகிச்சைககாக அவர் ஒரு உளவியல் சிகிச்சையாளரிடம் அனுப்பப்பட்டதையும் தெரிவிக்கிறது.
“பாலின அடையாளம் என்பது “குணப்படுத்த” முடியாதது என்பதை அந்த மருத்துவர் அறியவில்லை. இதுபோல பல மருத்துவர்கள் பாலினத்தையும் பாலீர்ப்பையும் குணப்படுத்தும் சிகிச்சைகளையே வேறு வழிகளில் பரிந்துரைக்கிறார்கள்” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவரின் பாலின அடையாளத்துக்கு சிகிச்சை தருவதற்காக அறிவாற்றல் நடத்தை சிகிச்சை தருவதும், மனத்தொய்வு மருந்துகளும் விறைப்புக் குறைபாடு மருந்துகளும் தருவது, உடல்நல மற்றும் மனநல மேம்பாடு என்ற போர்வையில் பாலீர்ப்புப் பண்பை “குணப்படுத்தும்” முயற்சிதான் என்று நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது. சம்பந்தபட்ட மனநல மருத்துவருக்கு ஏன் இதுபற்றித் தெரிவதில்லை என்றால், அவரது மருத்துவப்படிப்பின் கவ்லித்திட்டம் அதை வலியுறுத்தவில்லை என்றும், கல்வித்திட்டத்தைப் புதுப்பித்து இந்த காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
இதை தேசிய மருத்துவ கமிஷன் மற்றும் இந்திய உளவியல் சொசைட்டி ஆகிய அமைப்புகளின் பார்வைக்கு எடுத்துச்செல்லவேண்டும் என்று அரசாங்கத்தின் கூடுதல் தலைமை வழிக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வித்திட்டத்தில் போதுமான மாற்றங்களை ஏற்படுத்துவதன்முலம் எதிர்காலத்தில் இந்தப் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று தெரிவித்து அவர்கள் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பால்புதுமையினர் மற்றும் அவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்கள் பாதுகாப்பு கோரும்போது காவல்துறையினர் அதை மறுதலிப்பதோடு துன்புறுத்தவும் செய்கிறார்கள் என்பது குறித்து நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் சுற்றறிக்கை எதுவும் வரவில்லை என்பதால் இவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள் என்ற காரணமே வெளியில் சொல்லப்படுகிறது என்றாலும் பால்புதுமையினர் பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் இல்லாமல் போவதே இதற்குக் காரணம் என்று நீதிபதி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
“முன்பு வெளியிடப்பட்ட ஒரு நீதிமன்ற உத்தரவில், விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் யாரையும் வேறுபாட்டோடு நடத்தக்கூடாது என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். எளிதில் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடிய ஒரு சமூகத்தினர் வந்து பாதுகாப்பு கோரும்போது, மேலிடத்திலிருந்து உத்தரவு வரவில்லை என்பதால் அதை மறுப்பது சரியல்ல. மக்களைப் பாதுகாப்பதற்காக அரசு உருவாக்கிய அமைப்பே பாதுகாப்பின் முடிவாக மாறிவிடக்கூடாது” என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் பேசும்போது, இந்த தீர்ப்பு விவரங்கள் காவல்துறை தலைமை இயக்குநரிடம் எடுத்து செல்லப்படும் என்றும், விழிப்புணர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார். மேலும் சில பரிந்துரைகளையும் நீதிமன்றம் வெளியிட்டது:
- பால்புதுமையினர் மட்டுமல்லாமல் அவர்களுக்காகப் பணியாற்றும் செயல்பாட்டாளர்களையும் தொண்டு நிறுவனங்களையும் காவல்துறையினர் துன்புறுத்தாமல் இருக்கவேண்டும்.
- பால்புதுமையினர், செயல்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் துன்புறுத்தப்பட்டால் அது தவறான நடத்தை எனவும் அதற்காக தண்டனை விதிக்கப்படும் என்பதையும் காவல்துறையினருக்கான நடத்தை விதிகளில் சேர்க்கவேண்டும்.
- காவல்துறையினருக்கான உணர்வூட்டல் நிகழ்ச்சிகளை அந்த குறிப்பிட்ட சமூகத்தினரைச் சேர்ந்த நபர்கள் மற்றும்/அல்லது செயற்பாட்டாளர்கள்/தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர்தான் நடத்தவேண்டும்.
தலைமை வழக்கறிஞரைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிமன்றம்,
“விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நலனுக்காக பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் புகழ்பெற்று விளங்குகிறது. ஆகவே, பால்புதுமையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்க வேண்டும். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை அங்கீகரித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பதன்மூலம் அவர்களை மைய நீரோட்டத்தில் சேர்க்க அரசு முயற்சி செய்யும் என்று நீதிமன்றம் நம்புகிறது. இதுபற்றிய ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது இந்த நீதிமன்றத்தின் எதிர்பார்ப்புகளை மாநில அரசு நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டது.
பால்புதுமையினர் பற்றிய செய்திகளை வெளியிடும்போது பல ஊடகங்கள் தவறான செய்திகளைத் தருகின்றன என்று தெரிவித்த நீதிமன்றம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடந்து கொள்ளும் இந்தப் போக்குக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒரு செய்தியில், “ஆண் போல் வேடமிட்டுக்கொண்டு தனது தோழியுடன் கணவன் போல் வாழ்ந்துவந்த நிலையில், அவர்களைப் பலகட்ட முயர்சிகளுக்குப் பிறகு போலீஸார் மீட்டுள்ளனர்” எனவும் வேறொரு செய்தியில், “பெண்ணாக இருந்து தனக்காக ஆணாக மாறிய காதல் கணவருடன் செல்ல விறுப்பம் தெரிவித்தார்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுமையான வார்த்தைகளில் இதைக் கண்டித்த நீதிபதி வெங்கடேஷ்,
“ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது பெரிய வார்த்தைகளோடும் பின்னணி இசையோடும் கிண்டலடிக்கப்படுவது உணர்வுகளைப் புண்படுத்துகிற மாதிரி விமர்சனங்களை வைப்பதும் நம் சமூகத்துக்குப் புதிதல்ல என்றாலும் அதை நடைமுறையாக்கிவிடக்கூடாது. சமகால பிராந்திய மொழி ஊடகங்கள் தனிநபர்களின் தனிப்பட்ட, அந்தரங்க விஷயங்களையும் அடையாளங்களையும் மிக மோசமாக சித்தரிக்கின்றன. ஏற்கனவே ஒரு சமூகத்தைப் பற்றி நிலவும் மோசமான பொதுக்கருத்துக்களை இது பிரதிபலிப்பதோடு, அந்த எண்ணத்தை மேலும் வளர்க்கவும் செய்கிறது. ஒருவரை தவறாக சித்தரிப்பது, அறிவியலுக்குப்ப் புறம்பான சொற்களைப் பயன்படுத்துவது, தவறான தகவல்களைத் தருவது ஆகிய எல்லாமே பால்புதுமையினர் மீதான வெறுப்புதான். இதை மேலும் சகித்துக்கொள்ளவோ அனுமதிக்கவோ முடியாது. எல்லாரையும் உள்ளடக்கிய பாலினம் சார்ந்த சொற்களைப் பயன்படுத்துவதை ஊடகவியலாளர்கள் வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது”
ஆனால் இதை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை நீதிமன்றம் தரவில்லை. “அவ்வாறு தருவது பத்திரிக்கை சுதந்திரத்தில் தலையிடுவதாகிவிடும்” என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பால்புதுமையினர் பற்றிய செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடக்கவேண்டும் என்று நீதிபதி வெங்கடேஷ் வேண்டுகோள் விடுத்தார்:
“சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்வதே ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளைப் பொறுத்தவரை சரியாக இருக்கும் என்று நீதிமன்றம் எப்போதும் நம்புகிறது. செய்திகளை சரியாக வெளியிடுவதன்மூலம் விழிப்புணர்வைப் பரப்புவதில் ஊடகங்களும் பங்கு வகிக்க வேண்டும். சமூகத்தினரைச் சேர்ந்தவர்களை இழிவுபடுத்தும் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. நீதிமன்றத்துக்குப் பத்திரிக்கைத்துறையின்மீது நம்பிக்கை இருக்கிறது. இதுபோன்ற செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடக்கவேண்டும், அவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்கவேண்டும்”.
இறுதியாக, ஜூன் 7ம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவுகளும் வழிமுறைகளும் ஏற்கனவே விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதாகவும், இந்த வேகம் குறையாமல் செயல்பட்டால் பால்புதுமையினரை அவர்கள் இயல்பு மாறாமல் ஏற்றுக்கொள்வதன்மூலம் அவர்களுக்கான ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்த முடியும் என்றும் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் தங்கள் தரப்பிலிருந்து சில செயல்பாடுகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் அக்டோபர் 4ம் தேதி மதியம் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த கட்டுரை Bar and Bench தளத்தில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.
மொழிபெயர்ப்பு: நாராயணி