பியூலா – கரடிபொம்மைகளுக்குத் தெரிந்த ரகசியங்கள்

பியூலா (2019) – தனசக்தி

ஒரு மகள், ஒரு அம்மா, ஒரு அப்பத்தா. பியூலாக்கள் வாழும் உலகு இதுதான். ராஜகுமாரன்களும் அம்மாவின் கேவலுக்கும் பறவைகளின் சத்ததுக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவும் எப்போதாவது வந்துபோகிறார்கள். கொட்டாங்குச்சியில் இருக்கிற மழைநீரை அருந்தி நதியை உணர்கிற, பொம்மைகளின் மொழி புரிந்த பியூலாக்களுக்கு வாழ்வு வானவில்லாய் இருப்பதேயில்லை. பிடிக்காத இடத்தில் தொடுகிற மாமாக்களைப் பற்றியும் தாத்தாக்களைப் பற்றியும் அவள் பொம்மைகளிடம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறாள்.

“இவனுக்காக எதையும் செய்வேன்” என்று பிறந்த ஆண்குழந்தையிடம் மட்டுமே அப்பாக்களால் சத்தியம் செய்ய முடிகிறது. மகள்களைப் பெற்ற அம்மாக்கள் மனப்பிறழ்விலேயே இருக்கிறார்கள். அத்தனை பயத்துக்கு நடுவிலும் வெண்சங்கு நிறத்திலான தயிரை இளஞ்சூட்டின் சோற்றிலே கொட்டிப் பௌர்ணமியாகப் பியூலாக்களுக்குப் பரிமாறுகிறார்கள். பியூலாக்கள் பள்ளியிலிருந்து கொண்டுவரும் தீராக்கதைகளை நெஞ்சு முழுக்க நிரப்பிக்கொள்கிறார்கள். கடவுள்களோடு அவர்களுக்கு தினமும் சண்டைபோடவே வாய்க்கிறது.

மந்திர பீன்ஸ் விதைகளை வாங்கிவந்த ஜாக்கின் கதை தெரியுமா? வீட்டை உடைத்துக்கொண்டு வானை நோக்கி உயர்கிற பீன்ஸ் செடியைப் போலவே கட்டமைப்புகளை உடைத்துக்கொண்டு வெளியேறியிருக்கிறது தனசக்தியின் கவிதைமொழி. தொண்டையை அடைக்கிற உணர்வுகளுக்கும் தலையைத் திருப்பிக்கொள்ளமுடியாத காட்சிகளுக்குமுன்னால் மண்டியிட்டு தோற்கின்றன எழுத்துக்கான விதிமுறைகள்.

பியூலாக்களின் சின்னஞ்சிறு யோனிகளும் அம்மாக்களின், அப்பத்தாக்களின் முலைகளும் நூல்முழுக்க விரவியிருக்கின்றன…. அவை எதுவுமே ஆண்களின் பார்வை வட்டத்துக்குள் சிக்காதவை. இருப்பின் தீராத கனத்தை சுமப்பவை அவை. கழனியிலும் கணினியிலும் வேலை செய்யும்போது மாராப்பு சரிசெய்ய மூன்றாவது கை வேண்டுமென்ற விண்ணப்பத்தைக் கோருபவை. உயிர்களின் வாயிலாகவும் குழந்தைகளுக்குப் பாலூட்டவுமே இருக்கிற யோனிகளும் முலைகளும் இடையறாத Voyeurism தரும் அயர்ச்சியிலிருந்து தங்களை மீட்டுக்கொள்ளப் போராடுபவை.

பியூலாக்களின் மீது செலுத்தப்படும் வன்முறையை நேரடியாகப் பேசுகிற கவிதைகள் அதிர்ச்சிமிக்கவை. Child Trafficking முதலிய பெரிய சந்தைகளின் துருப்பிடித்த வன்மத்தை அநாயாசமாக எழுதிக்கடக்கின்றன தனசக்தியின் வரிகள். நாம்தான் தண்ணீர் குடித்து நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. எங்கே இருந்தாலும் ஒரு ஜோடிக்கண்களேனும் தன்னைப் பார்த்துக்கொண்டே இருப்பதான பிரமையிலேயே பியூலாக்கள் வாழ்வதன் நிதர்சனத்தை, அதன் தீராத வலியை, ஜிகினாக்களற்ற இந்தக் கவிதைகள் நமக்குள் எளிதில் கடத்திவிடுகின்றன.

தாய்வழியாக வருகிற நெறிகளும்கோட்பாடுகளும் இந்தக் கவிதைகளில் அங்கங்கே தெறிப்பது ஒரு தனியான அனுபவம். பெண்பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும் என்று அம்மாவுக்கு அப்பத்தாக்கள் வார்த்தைகளாலும் அனுபவங்களாலும் கற்றுத்தருகிறார்கள். தங்கள் மகள்களிடமோ நேரடியாக எதுவும் பேசுவதில்லை. எங்கேயோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு “இதெல்லாம் தப்பு, பாலியல் கல்வி அவசியம். பெற்றோர்கள் பேசணும்” என்று நாம் பேசிவிடலாம். நடைமுறையின் பிரதிபலிப்பு இதுவாகத்தான் இருக்கிறது. அதீத பாதுகாப்பு உணர்வும் அச்சமும் சூழ வளர்க்கப்படுகிற பெண்பிள்ளைகளைச் சுற்றி எப்போதுமே அவர்கள் அம்மாக்கள் சொல்லித்தராத ரகசியங்கள் வலையெனச் சூழ்ந்திருக்கின்றன. கணவன் வீட்டுக்குப் போனபின் ஸ்பீட் டயலில் முதல் எண்ணாக அம்மாவின் பெயரை அழுத்தும் மகள்களுக்கு பெரும்பாலும் அம்மாக்கள் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே போய்விடுகிறார்கள்.

பியூலாவுக்கு ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு வயது, ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு குணம். இத்தனை அணுக்கமாகப் பெண்ணுடலை அணுகியிருக்கும் கவிதைகளை சமீபகாலத்தில் நான் படித்ததில்லை. பியூலாவின் குழந்தைத்தனத்தையும் அவள் மீது செலுத்தப்படுகிற வன்முறையையும் ஒரே தட்டில் திரும்பத் திரும்ப வைத்துக்காட்டுகின்றன இந்தக் கவிதைகள். தன் உடல் மீதான் ப்ரக்ஞை வளராத பியூலாவும், தன் உடல்மீதான அதீத அக்கறையைக் கடந்துவிட்ட அப்பத்தாவும் இருவேறு தளங்களில் நின்றுகொண்டிருக்க, மாராப்பை மறைக்க மூன்றாவது கைதேடும் ஒருத்தி பாலமாய்த் தன் உடலை விரித்திருக்கிறாள்.

அம்மாவின் நினைவு வரும்போதெல்லாம் தலைமுடியை விரித்து சீப்பால் வாருவதும், அப்பத்தாவின் நினைவு வரும்போதெல்லாம் கடுகுடப்பாவை முகர்ந்துபார்ப்பதுமாக விவரிக்கும் காட்சிகளைப் படிக்கும்போது தலைமுறைகளின் தொடர்ச்சியைத் தனக்குள் ஒளித்து வைத்திருக்கின்ற உடல்கள் தெரிகின்றன. என் பிரியப்பட்ட ரசம் சோறே என்று காதலனை அழைக்கும் கடிதத்தை என்னுள் சுமந்து அலைந்தபடியே இருக்கிறேன். செப்டிக் டாங்க் தலைவனுக்காய்ப் பூச்சூடும் தலைவியோடும் வெண்டைக்காய் நறுக்கும்போதெல்லாம் மூக்கில் ஒட்டி விளையாடும் பியூலாவுடனும் மத்தியான வெயிலில் குழாயடியில் அமர்ந்து வெயில் பார்க்கிறேன்.

பியூலாக்களுக்கு குழந்தைத்தனம் மாறாத தினங்களும், அம்மாக்களுக்குக் கைநிறைய ரசம்சோறும், அப்பத்தாக்களுக்குத் தீராத வெற்றிலைகளும் கிடைக்கட்டும். கையறு நிலையில் இந்த வேண்டுதல்களை பலூனில் கட்டி விண்ணுக்கு அனுப்புவதைத் தவிர ஒரு வளர்ந்த பியூலாவாக வேறு என்ன செய்துவிடமுடியும் நான்?

~*~*~