தேவி

ஓவியம்: கிரீஷ் |Art: Gireesh

மாதவிடாய் காலங்களில் மறைத்து மறைத்து 
பெண்கள் நாப்கின் வாங்குவதை தேவி
ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருப்பாள்..

நானும் மூன்றுநாட்களுக்கு விலக்கு 
எனச்சொல்ல தேவிக்கும்
ஆசைகள் இருந்தது..
உடன் வேலைபார்க்கும் பெண்கள்,
இண்டர்வியூ செய்யும் சமூகசேவகர்கள்,
பக்கத்து வீட்டு பெண்கள் என
எல்லாரிடமும் மாதவிடாய் பற்றியே
பேசிக்கொண்டிருப்பாள்..

சரியாக 21, 22, 23-ம் தேதிகளில்
தனக்கு மாதவிடாய் வருமென
எல்லோரிடமும் சொல்லிவைத்திருந்தாள்..
அந்நாட்களில் அவள் யாரிடமும்
பேசுவதில்லை…
வீட்டின் மூலையில் சுருண்டு படுத்து
சத்தமாய் முனகிக்கொண்டிருப்பாள்..

பொட்டைக்கு எதுக்கு இந்த ஆச?
என காதலன் சொன்ன ஒருநாளில்
மாதவிடாய் பேச்சை நிறுத்தினாள்..

ஆசையை அடக்கமுடியாத சமயங்களில்
யாருக்கும் தெரியாமல் நாப்கின் வாங்கி
ரகசியமாய் வைத்துக்கொள்வாள்..
மெடிக்கல்ஷாப்காரனின் 
கிண்டலுக்கு பிறகு
அதுவும் நின்றுபோயிற்று..

வயதாகிக்கொண்டிருகும் தேவிக்கு முன்புபோல்
இப்போது மூத்திரம் வருவதில்லை..
வெகுநேரம் முக்கிபின் ஹேர்பினோ
குச்சியோ வைத்து துளையில்
குத்தியபிறகுதான் சிறிதாவது வருகிறது..
பத்தொன்பது வயதில் 
ஆபரேசனுக்கு போட்ட ஊசி
முதுகில் இன்னமும் வலிக்கிறது..
வெகுநேரம் உட்கார்ந்து முக்கமுடியவில்லை..
ஒண்ணுக்கே போகமுடில,
இப்போ பீரியட் ஒண்ணுதான் கொறச்சல்
என இப்போதெல்லாம் தேவி
தொப்புளிலும், நக இடுக்கிலும்
நல்லெண்ணை வைத்து உறங்கிவிடுகிறாள்..

~*~*~