சன்னதம்

தங்கள் மொழியை அவர்கள் அஞ்சினார்கள். அது தங்களை அறியாத ஆழங்களுடன் இணைக்கும் மாயச்சரடு என்று அவர்கள் அகம் அறிந்திருந்தது.

-கொற்றவை, ஜெயமோகன்

“அதுக்கு இப்போ என்னா வேணும்னே இப்டி தைதைன்னு குதிச்சிட்டு இருக்து”, ரேகாவின் பெங்களூரு தமிழ் எரிச்சலோடு கேள்விகளாய் கேட்டபடி இருந்தது. “என்னாடீ வேணோம் ஒனக்கு!” ஆனால் மலரிடம் எதற்கும் பதில் இல்லை. இல்லை, அவள் இவர்களோடு பேசுவதாக இல்லை. அவள் வேறொன்றைக் கண்டுகொண்டாள். மொழியால் அறியவும் விளக்கவும் முடியாத ஒன்று. அதனோடுதான் அவள் இப்போது உரையாடிக் கொண்டிருக்கிறாள். அதன் எச்சங்கள் மொழியாகிக் கசிவதையே அவர்கள் புரிந்துகொள்ள முயற்சிசெய்து தோற்கின்றனர். அந்த வீட்டில் ஒருவருக்குமே மொழியோடு அவ்வளவு சுமூகமான உறவில்லை. ரேகாவைத் தவிர. ரேகாவுக்கு தமிழும் கன்னடமும் மலையாளமும் தெலுங்கும் இந்தியும் ஆங்கிலமும் சிறிது சிறிது தெரியும். ரேகாவுடைய தமிழில் பாலுக்கு மட்டும் வேலையில்லை. எல்லோருமே அவளுக்கு அஃறிணைதான், தேவைக்கேற்ற சார்களும் மேடங்களும் வந்துபோவார்கள் என்றாலும் அவளது தமிழில் அவையெதற்கும் இடமில்லை. நீண்டகால பெங்களூரு வாசம் அதனை சிறிதே மாற்றி, தமிழ்நாட்டை விட்டு வெளியேறியிராத யாருக்கும் சிரிப்பையோ ஆச்சரியத்தையோ தருவதாக ஆகியிருந்தது. யாரோ ஒருமுறை இப்படி எல்லோரையும் மரியாதை இல்லாமல் பேசுகிறாயே என்றதற்கு “சாமியவே அப்டித்தான பேசுறோம்” என்று சொன்னாள்; பின்னர் “ஆடு மாடவிட நம்ம என்னா பெருசு, அத எல்லாம் இப்டிதானே பேசுற” என்றொரு முறை; “இதுவேற ஒனக் புரியாது” என்றொருமுறை. ரேகாவின் அறிதலுக்குட்பட்ட வரையில் அதற்கென காரணங்களோ நோக்கங்களோ ஏதுமில்லை! யோசனைகளுக்கு வெளியேயிருக்கும் ஒரு எளிய விஷயம் அவ்வளவுதான்.

ஆனால், மலர் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பது வேறொன்று. சரியாக அதன் முதல் நினைவு எந்த நாளில் இருந்து தொடங்கியதென இப்போது அவளால் சொல்லமுடியவில்லை. ஒரு கனவிலிருந்து என்று சொல்லலாம். மலையின் மேல் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆலமரம், அதன் நிழலில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம். அதற்கொரு தலைவி, அவளுக்கொரு மகவு. தலைவியே கடவுளென்று வாழுமொரு குடி. அவர்கள் காட்டில் எதைக்கண்டும் அஞ்சாதிருந்தார்கள். தங்கள் கடந்த காலமொன்றே அவர்களது அச்சம். கொடிய கொடிய விசயங்களை நினைவுகளில் மறைத்து வைத்துக்கொண்டு எரியும் கனங்குகளாய் அவற்றை மறைத்து வைத்தபடி பொய்யானதொரு அமைதியில் தாங்கள் வாழ்வதாய் அவர்கள் அறிந்தே இருந்தார்கள். அவை யாவையென அவர்களால் கைக்காட்டி சொல்ல இயலாதென்றாலும் அது அவர்கள் அதைக்குறித்த அச்சத்தை கைவிடாதே இருந்தார்கள். அவர்களது தெய்வங்களாய் கல்லிலும், சன்னதம் கொண்டாடும் பாடல்களாய் தாளத்தில் அந்த அச்சங்களை கட்டி வைத்திருந்தார்கள். தலைவியின் மகவு ஆண்பிள்ளையானதில் யாவருக்கும் வருத்தம். அடுத்த தலைவி யாரென்பது இனியொரு போட்டியாகும். அமிழ்ந்திருக்கும் நினைவிலிருந்து ஏதோவொன்று மீண்டெழுந்து ஒரு போராகி அவர்களை மலையிலிருந்து கீழிறக்கும் என்று அவர்களுக்கு அச்சம். ஒவ்வொரு கனவிலும் மலரால் அந்த அச்சத்தை உணரமுடிந்தது. அது அவளுடையது இல்லை. என்றாலும் கூட, தூரத்து மனிதரொருவரின் அச்சத்தை உணரநேர்வது போல கலந்தும் கலக்காமலும் அவள் அதை உணர்ந்துகொண்டிருந்தாள்.

“த்தா ஒரு கதையா சொல்லமாட்யா , ஒவ்வோர் வாட்டியும் ஒண்ணோன்னு சொல்ற” என்று ரேகா கோபமுறுகிறாள். இவ்விரு நாட்களில் மலர் தொடர்பும் அர்த்தமுமற்ற வெவ்வேறு கதைகளை சொல்லிவிட்டாள். இனி ரேணுகாம்மாவை அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் ரேணுகாம்மா நிச்சயம் இதை “அவ வந்திருக்காடி” என்று தொடங்கி ஒரு வாரத்துக்காவது கடைகேட்பது தொடங்கி எல்லாவற்றையும் நிறுத்திவிடுவாள். மலர் இல்லாவிட்டால் அந்த வீட்டில் ஒரு வாரத்துக்குமேல் அடுப்பெரிவது கஷ்டம்தான்.

மலருக்கு இது சற்று அலுப்பாக இருக்கிறது. அவள் ஒரு புதிய கதை தேடுகிறாள். ஆனால் மறுபடியும், மறுபடியும், மீண்டும், மீண்டும், வேறு வேறு நபர்களிடமிருந்து அதே கதை. சிறிய மாற்றங்கள், வெவ்வேறு சூழல்கள், ஆனால் கதை ஒன்றுதான். அவள் கனவிலும் கூட! இந்நேரம் உங்களுக்கே தெரிந்திருக்கக் கூடும். ஒரு நாள், அது முதல் நாள் இல்லை என்றாலும், அன்றுதான் அது மற்றவர்களால் கவனிக்கப்பட்டது என்பதால், ஒரு நாள் தலைவியின் ஆண் மகன் மயிலிறகுகளையும் வண்ணப் பாவாடைகளையும் சூடிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். அவர்கள் தலைவியின் வாரிசை மலைமேலிருந்து தள்ளிவிட்டார்கள். பாதி வழியில் சிறகுகள் முளைத்து அவள் கடலின் திசையில் பறந்துசெல்வதைக் காண அவர்களில் ஒரு சிறுகுழந்தையன்றி யாரும் காத்திருக்கவில்லை. பின் தலைவிக்கு வயதாயிற்று. மற்ற குடிகள் அவர்கள் மேல் போர் தொடுத்தனர். சில தலைவிகள் மாண்டனர். பழைய தலைவி பேச்சு அறுந்துபோய் இவற்றை மௌன சாட்சியாகக் கண்டுகொண்டிருந்தாள். பின்னொரு நாள் அவள் வந்தாள். சந்தேகத்திற்குரிய ஒரு பெரிய பொம்பளையாக இருந்தாள் அவள். எவர் அனுமதியும் கோராமல் அவர்களிடத்தே குடில் அமைத்து வாழ்ந்து ஒரு போரில் பின் நின்று குருதி சிந்தப் போராடி, பின் முன் நடத்தி அவர்களை மீட்டெடுத்தாள்.

அவள்தான் தாங்கள் கொலைசெய்த மகவென்று அறிந்து, அவள் ஆடைகளை உரித்தெடுத்து, ஆணெனச் சொல்லி மீண்டும் கொன்று எரித்தனர். வழமைபோல் பஞ்சம் வந்தது. தலைவி இறந்தாள். கிழவியொருத்தி சன்னதம் கொண்டு கூற, அவர்களை மலையை விட்டிறங்கி தாங்கள் கொன்றவளை சாமியாக்கி வழிபட்டனர். அன்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுமிதான் இக்கிழவி என்பது சில கதைகளில் முக்கியமானதாகச் சொல்லப்பட்டது. எத்தனை முறை சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதை. ஆனால் ஒருமுறையும் இப்படி இல்லை. எவை எல்லாம் மறைக்கப்படுகிறது. எவற்றை மொழி முழுங்கியது, எவற்றை மலையும், கடலும், காற்றும், மக்களும் முழுங்கினர்.

எதிர்பாத்தபடியே ரேணுகாம்மா வந்து பழியை அம்மனின் மேல் போட்டார். இனி மலர் குறைந்தது ஒரு வாரத்துக்காவது மஞ்சள் மட்டுமே உடுத்தவேண்டும். யாரும் அவளை அதட்டக் கூடாது. “இது வேணும்தாண்டி இப்டி பண்றா, நம்மா எல்லா இவ்ளுக்கு சேவ்கம் பண்ணோ” என ரேகா சொல்லிப் பார்த்தும் மற்ற ஒருவரும் அவளுக்காய் ஆமாம் போடத் தயாரில்லை.

மலர் மெல்ல அந்த பாலத்தின் மேல் நடந்துகொண்டிருக்கிறாள். வேறொரு கதை தோன்றுகிறது இப்போது. பின் இன்னொன்று, இன்னொன்றென பலப் பல. அவள் இந்நகரையும், இம்மொழியையும், எல்லா மொழிகளையும் நடந்தே கடந்துவிடுவாள் என்பதுபோல் தோன்றுகிறது. மொழி சற்றே அச்சமுறுகிறது, தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து தன் பலநூறு கரங்களால் யாவற்றையும் தன் எல்லைகளுக்குள்ளேயே வைத்திருக்கின்றது. அதன் எல்லைகளை ஒருவர் தாண்டிப் போவதென்பது தெளிவானதொரு மனதோடு நடக்க அது அனுமதிப்பதாயில்லை. ஆனால், இப்பெண், இவள் செல்லட்டும் என்றும் அது சும்மாயிருக்கிறது. இனி இவளிடமிருந்து பறித்துக்கொள்ள அதனிடம் பெரிதாய் ஏதுமில்லை. அவள் மெல்ல கடற்கரைக்கு நடந்துசெல்வதை அவை பார்த்துக்கொண்டிருக்கின்றன.

*

அந்தக் கடற்கரையில் அச்சிறு குழுவை சந்திக்கத்தான் அவன் மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு வந்திருந்தான். அவனிடம் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைப்பருவத்திலிருந்து தக்கவைத்துக் கொள்வதைவிட சற்றுக்கூடுதலாகவே அப்பாவித்தனம் மிச்சமிருந்தது. அந்தப் பூனைக் கண்கள் மறைக்கமுயன்றதையும் தாண்டி அது வெளிப்பட்டது. இருளிலும் ஒளியிலும், தனித்தும் கூடியும், புதிய உலகங்களில் பயணித்தும், பழகிய உலகில் புதியதும் தனதேயுமான உடலோடும் பயணித்துச் சேகரித்ததொரு புத்தம்புதிய அப்பாவித்தனமாக இருந்தது. கையிலிருந்த ஸ்டீல் காப்பு அதை இறுகப் பிடித்திருந்தது. லேசாக அரித்தாலும் கூட அதற்காகவே அவன் அதை சுமந்து திரிந்தான். தனது உண்மைக் காதல் மட்டுமே கொடுக்கக் கூடியது அவன் வாழ்வனுபவங்களால் அறிந்திருந்த தன்னம்பிக்கையை அவனது புதிய ஹேர்கட்டே கொடுத்திருந்த்தை எதிர்பார்த்திராத உணர்வு ஒரு ஓரமாக அக்கண்களில் மின்னியது. இப்போது, இந்த கடற்கரையில் இப்பைத்தியக்காரக் கூட்டத்திடையே வந்து அமர்ந்திருக்கிறான். மற்றவர்களை அப்படி தோற்றத்தையும் முதல் பார்வையையும் கொண்டு மதிப்பிடக் கூடாதென அறிவான், ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்க்கையை வாழ அவர்களுக்கேயான வழி என ஒன்று இருக்கிறது. அவன் உண்மையைச் சொன்னால், ப்ரியாவைத் தவிர இவ்வுலகு முழுவதும் அவனையே பைத்தியம் என்றுதான் அழைக்கும். ஒருவேளை, ப்ரியாவும், சிலசமயங்களில் அவள் அவனை அவனாகவேதான் நேசிக்கிறாளா என்றும் சந்தேகம் வரும்! அவளும் இவர்களைப் போன்றவளோ?

அவன் தனது காதல் கதையை சொல்லிக்கொண்டிருந்தான். அவனது கண்கள் விண்ணைத்தாண்டி வருவாயாவில் கார்த்திக் ஜெஸ்ஸியைப் பற்றிப் பேசுவதை ஒத்திருந்தன. சிலருக்கு அற்புதமாகவும், சிலருக்கு வேடிக்கையாகவும், சிலருக்கு எரிச்சலூட்டும்படியும் அது தொடர்ந்துகொண்டிருந்தது. கடைசியாக சுருட்டை முடியுடன், வயலட் வண்ண லிப்ஸ்டிக் அணிந்துமிருந்த அந்த உயரமான பெண்தான் அதைக் கேட்டாள், “அப்போ உங்க லவ்வ லெஸ்பியன் லவ்னு சொல்லலாமா?” அவனுக்கு கோபம் வந்தது. அதைவிட அக்கேள்வியின் நேரடியான திமிர்த்தன்மையால் எரிச்சலும் அதிர்ச்சியும். இதுவே அவனுக்குப் பின் உண்மையாக, கிசுகிசுவாக பேசப்படுவதை அவன் அறியாமலில்லை. ஆனாலும் ஒரு கேள்வியாக, ஆம் இல்லை என்ற பதிலை எதிர்பார்த்து அவனிடமே கேட்கப்படுவது இதுவே முதல்முறை. இதுதான் அவன் ப்ரியாவிடம் கேட்க விரும்பிய கேள்வியா? இதற்குத்தான் அவனிடம் வார்த்தைகள் இல்லாமல் இருந்ததா?

இல்லை, இது அவனுடைய தவறும்தான். இச்சிறிய குழுவில் எல்லோரும் அறிமுகப்படுத்திக்கொண்டபோது. அவன் தன் பெயரை, தனக்காக தானே தேர்ந்துகொண்ட பெயரை சொல்லவில்லை. ஒர் பெண் பெயரை சொன்னான், அதுவும் பெற்றோர் வைத்த பெயர் அல்ல. ஒரு பிரபல நடிகையின் பெயர், ஏன் என்று அவனுக்கு சரியாகத் தெரியவில்லை. அவன் ஏமாற்றுகிறான் என்று நினைத்துவிடுவார்கள் என்ற பயம் அதிகமானதால் இருக்கலாம். இவ்வுலகுக்கும், அது ஆண் பெண் எனக் கருதியவற்றுக்கும் இடையே அவன் செய்யவேண்டியதாக கருதிக்கொண்டிருக்கும் சமரசங்கள் முழுமையடையவில்லை என்ற எண்ணத்தினால் இருக்கலாம்.

யோசித்து, தவறு தன்னுடையதே கேள்விகேட்ட பெண்ணுடையதல்ல என்ற முடிவுக்கு அவன் வந்தான். (அவனிடம் இதுவரை இல்லாத வார்த்தைகளெல்லாம் அப்பெண்ணிடம் இருந்தன என்பதை அவன் அறிந்திருக்க நியாயமில்லை. இருப்பினும் அவள் இந்த வார்த்தையைக் கொண்டே அதைக் கேட்டது எதனால் என்பதை அவளோ, நாமோ தெளிவாகச் சொல்லிவிட இயலாது.) அவன் ஒருவழியாக பதிலளித்தான், “இல்ல என்னோடது வெறும் நார்மல் லவ்தான்”. ஆங்கிலமும் தமிழும் சற்றே ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டன. அச்சிறு குழுவில் இருந்தோர் கடகடவென அடுத்தடுத்த விசயங்களைப் பேசத்தொடங்கினர். அதன்பின் அவனிடம் யாரும் பேசவில்லை, அல்லது அம்மாலையில் அவனுக்குப் பேச எதுவும் இருக்கவில்லை.

***

அதே மாலையில், அந்நீண்ட கடற்கரையின் வேறோர் பகுதியில் அவர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள். ஒருபக்கம் மொழி நிறைந்த நகரம் நெருக்கித்தள்ள, மறுபுறம் கடலலைகள் வானின் பிரதிபலிப்பும் நுரையும்கொண்டு விளையாடிக்கொண்டிருக்க அவர்கள் அங்கே நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அன்று மொழியைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். மொழியின் மீது இருவருக்கும் இருக்கும் வெறுப்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கிறார்கள். மொழி ஒரு அரக்கனைப் போலென்று ஒருவர் சொல்ல, மற்றவர் சிரிக்க, பின் இருவருமாக சிரிக்கத் தொடங்குகிறார்கள். மொழி கடற்கன்னிகளின் பாடலைப் போன்றதென்று மற்றவர் சொல்ல, அந்நகரின் வடக்கிலிருக்கும் கடற்கன்னி என்ற பெயருடைய கடலோர கிராமத்தைச் சுற்றி மெல்ல அவர்களிடத்தே திரும்புகிறது பேச்சு. மொழி இத்தனைக்கும் வளைந்துநெளித்து அவர்களுக்குத் துணைசெய்கிறது. மொழி ஒரு பறவையின் கூடு, மொழி அதன் சிறகு, மொழி எதுவுமே இல்லை, மொழி எல்லாமுமாக இருக்கிறது, பழி மொழியின் மீதன்றி சொற்களின்மீதே என பேச்சு நீண்டு பின்னிருக்கும் நகரத்தின்மீது இருள்கவியத் தொடங்குவதை அவர்களிடமிருந்து மறைத்துவிடுகிறது.

அங்குமிங்கும் சுழன்றலைந்து ஒரு வீடு இரு உடல்கள் என அவர்கள் அமைதி கொள்கிறார்கள். மொழியின் எல்லையைக் கடந்துவிட்டதாக அவ்வுடல்கள் பாவனை செய்கின்றன, உண்மையில் அவை புதிய இன்னும் சுதந்திரமானதொரு மொழியைக் கண்டுபிடித்துவிட்டதை இன்னும் அறிந்திருக்கவில்லை. பெயரிடப்படாத அம்மொழி சிறிய தொடுகைகளில் வெட்கமுறுகிறது, முத்தங்களின்போது நாக்கை சரியாகப் பயன்படுத்தப் பழகிக்கொண்டிருக்கிறது. அதனிருப்பை யாரும் இன்னும் முழுமையாக அறிந்திடவில்லை என்றாலும் அது இப்போதைக்கு அழிந்துவரும் மொழிகளோடு போய் சேர்ந்துகொள்வதாக இல்லை. மிகச்சிறிய இடைவெளிகளிலும், வெப்பமும் குளிரும் மாறிமாறி வீசுகையிலும் அது தனதுயிரை மெல்ல மெல்ல வளர்க்கிறது.

~*~*~