LGBTQIA+ சொற்களஞ்சியத்தை மாநில மொழியில் வெளியிடும் முதல் மாநிலமாகிறது தமிழகம்

நாட்டிலேயே முதன்முறையாக, தமிழக அரசு LGBTQIA+ தமிழ்ச் சொற்களஞ்சியத்தை அரசிதழில் வெளியிட்டுள்ளது. குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ், தி நியூஸ் மினிட், ஓரினம் மற்றும் பல பால்புது நபர்களால் வெளியிடப்பட்ட LGBTQIA+ சொற்களஞ்சியத்தில் இருந்து இந்த சொற்களஞ்சியம் பெருமளவில் மாற்றியமைக்கப்படவில்லை என்றாலும், தமிழக அரசாங்கத்தின் இந்த பதிப்பில் சில மாற்றங்கள் உள்ளன. தமிழகத்தில் வாழும் LGBTQIA+ மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் விதத்தில் அமைந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் பல தீர்ப்புகளின் பின்னணியில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. LGBTQIA+ நபர்களை இழிவுபடுத்தும் வகையிலான சொற்களைக் குறிப்பிடுவதைத் தடுக்கும் வகையில், ஊடகங்கள் பயன்படுத்தும் விதத்தில் தமிழில் சொற்களின் பட்டியலை ஏற்படுத்துமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த அருங்களஞ்சியத்தில் பால்புதுமையர் (queer), திருநங்கை (transgender woman), திருநம்பி (transgender man), ஊடுபால் (intersex), போன்ற பல சொற்கள் இடம்பெற்றிருந்தன. மாநிலத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழ் LGBTQIA+ நபர்கள் மற்றும் பால்ப்து சமூகங்கள், தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளன. தமிழ் LGBTQIA+ சொற்பட்டியல் தொடர்பாக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸின் (QCC) இணை நிறுவனர் C மௌலி கூறுகையில், “நாங்கள் தயாரித்த சொற்களஞ்சியத்தை சமூக நலத் துறை பெருமளவில் பயன்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார். “LGBTQIA+ மக்களின் மொழி தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே இருப்பதால், இந்த சொற்களஞ்சியமும் அடிக்கடி புதுப்பிக்கப்படும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் கூறுகிறார்.

தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் உறுப்பினரும், தமிழக அரசின் இந்த சொற்களஞ்சியத்தை இறுதி செய்த குழுவில் இடம்பெற்றிருந்த பரதநாட்டிய கலைஞருமான நர்த்தகி நடராஜ் கூறுகையில், LGBTQIA+ நபர்களுக்கான ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் சொற்களை இந்த அருஞ்சொற்பொருள் தொகுத்துள்ளது என்று கூறுகிறார். “திருநங்கை’ என்ற வார்த்தை மரியாதைக்குரியதாகவும் பிரபலமாகவும் மாற்றப்பட்டது போலவே, இந்த வார்த்தைகளும் அனைவரையும் சென்றடைய வேண்டும். இதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன,” என்று அவர் கூறுவதோடு, LGBTQIA + நபர்களுக்கு இழிவான சொற்களைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்துவார்கள் என்று அவர் நம்புவதாகவும் சொல்கிறார்.

தமிழக அரசு வெளியிட்ட LGBTQIA+ சொற்களஞ்சியத்தின் முதல் பதிப்பு இதுவல்ல. பிப்ரவரி 2022இல், தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு சொற்களஞ்சியத்தை சமர்ப்பித்தது. அது பல LGBTQIA+ நபர்கள் மற்றும் பால்புது சமூகங்களால் மிகவும் பிரச்சனைக்குரியதாகக் கருதப்பட்டது. “இந்த (பால்புது) சமுதாயத்தின் ஈடுபாடு இல்லாமல் சமூக நலத்துறையால் தயாரிக்கப்பட்ட முதல் சொற்களஞ்சியம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது” என்று மௌலி கூறுகிறார். ஆனால், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது உத்தரவில் QCC, TNM, ஓரினம் மற்றும் பிறர் தொகுத்து உருவாக்கிய சொற்களஞ்சியத்தை வெளியிட முடிவு செய்தார். மேலும், இந்த களஞ்சியத்தை அடித்தளமாக வைத்து அரசாங்கத்தின் இறுதி பட்டியலைத் தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். “இப்போது, ​​அரசாங்கம் பால்புது சமுதாயத்தால் தயாரிக்கப்பட்ட சொற்களஞ்சியத்தை பயன்படுத்தியுள்ளதை நாங்கள் பாராட்டுகிறோம்,” என்று மௌலி கூறுகிறார்.

QCC, TNM, Orinam மற்றும் பால்புதுமையர் வெளியிட்ட சொற்களஞ்சியத்திலிருந்துள்ள மாற்றங்கள்

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சொற்களஞ்சியம் QCC, TNM, ஓரினம் மற்றும் பால்புதுமையர் இணைந்து வெளியிட்ட பெரும்பாலான சொற்களை ஏற்றுக்கொண்டாலும், திருநருக்கான (transgender) தமிழ்ச் சொல் மாறியிருப்பது முக்கிய மாற்றங்களில் ஒன்று. முதல் சொற்களஞ்சியத்தில் ‘திருநர்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கையில், தமிழக அரசின் இந்த களஞ்சியத்தில் ‘மருவிய பாலினம்/மாற்று பாலினம்/மாறிய பாலினம்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘திருநர்’ என்பது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சொல்லாகும்.

இந்த மாற்றம் குறித்து ​​நர்த்தகி நடராஜ் அவர்களிடம் கேட்டபோது, ‘திருநர்’ என்ற சொல்லுக்கு ‘ஆண்களின் குழு’ என்று அர்த்தம், எனவே அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னார். “ஒரு திருநங்கையான நான், ஏன் பழைய குடைச் சொல்லுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட வேண்டும்?”, என்று கேட்கிறார். இதே கருத்தை எதிரொலிக்கும் வகையில், தமிழக அரசு கலைச்சொற்களை இறுதி செய்யும் குழுவில் இடம்பெற்றிருந்த திருநங்கையான கலைமாமணி சுதா கூறுகையில், “திருநங்கை, திருநம்பி ஆகிய தமிழ் வார்த்தைகளில் இருந்து ‘திரு’ என்ற வார்த்தை எடுத்துக்கொள்ளப்பட்டு திருநர் என்ற சொல் உருவாக்கப்பட்டது. முந்தைய வார்த்தைகளை மக்கள் புரிந்து கொண்டாலும், பிந்தையதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் வார்த்தைகள் உருவாக்கப்பட வேண்டும். எனவே ‘மாறிய பாலினம்’ அல்லது ‘மாற்றுப் பாலினம்’ என்று நாம் கூறும்போது, ​​மக்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள்.”

பல தமிழ் அகராதிகளின்படி, ‘திருநர்’ என்பதில் உள்ள ‘திரு’ என்பது மரியாதைக்குரிய சொல் என்றும், பல திருநங்கைகளுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட கிரியா தற்கல தமிழ் அகராதியில் ‘திருநர்’ என்ற பதம் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் மௌலி சுட்டிக்காட்டுகிறார். “‘திருநர்’ என்பது அனைத்து மக்கள் மற்றும் இந்தியாவிற்கு வெளியே தமிழ் பேசும் பால்புதுமையராலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல். இதை ஆலோசனை கூட்டத்திலும் நான் தெரிவித்தேன். சொற்களஞ்சியத்தில் ‘திருநர்’ என்ற சொல்லையும் சமூக நலத் துறை சேர்க்க வேண்டும்,” என்று மௌலி கூறுகிறார்.

எழுத்தாளரும், யாழ் குயர் விழாவின் பொறுப்பாளருமான ஹரி ராஜலெட்சுமி கூறுகையில், “இலங்கையில் எனக்குத் தெரிந்த இரண்டு அமைப்புகளாவது தங்கள் பெயரிலேயே ‘திருநர்; என்ற சொல்லுடன் இயங்கி வருகின்றன – யாழ்ப்பாணம் திருநர் வலையமைப்பு மற்றும் தமிழ் திருநர் பேரவை.”

கோவை வானவில் கூட்டத்தின் ஒரு அங்கமான வண்டர்குழலி கூறுகையில், ‘மருவிய பாலினம்’ என்ற சொல் ஒரு வகையான பாலின முரண்பாட்டு மன உளைச்சலை தூண்டுகிறது என்கிறார். “ஒரு நபர் மற்றொரு நபராக மாறுகிறார் என்ற கருத்து பால்புது சமூகத்தில் பலருக்கு சிக்கலானதாக இருக்கலாம். மேலும், ‘திருநர்’ என்பது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால், அந்தச் சொல்லை மீண்டும் கொண்டு வருவது சிறப்பாக இருக்கும்,” என்கிறார்.

முதல் பட்டியலில் இல்லாத ஆனால் தமிழக அரசாங்கத்தின் சொற்களஞ்சியத்தில் தோன்றிய மற்றொரு சொல் திரவநிலை பாலின அடையாளத்திற்கான (gender fluidity) மாற்று சொல் – ‘நிலையாற்ற பாலினம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமுதாய உறுப்பினர்கள் தேர்வு செய்த சொல் ‘திரவநிலை பாலினம்/நீர்மநிலை பாலினம்’ என்பதாகும். ‘நிலையற்ற பாலினம்’ என்ற சொல்லை பொதுவாக்கினால், அதற்கு பின்விளைவுகள் இருக்கும் என்கிறார் ஹரி. “நிலையற்ற’ என்ற வார்த்தைக்கு நிலை இல்லாத ஒன்று என்று பொருள் – இது ‘அடிப்படையற்ற’ என்றும் பொருள்படும். இது நமக்கு தீங்கு விளைவிக்கும். பொதுவாக பயன்படுத்தப்படும்போது, ​​​​ஒரு நபர் ‘நிலையற்ற பாலினத்தை’ சேர்ந்தவர் என்று தவறாகப் பயன்படுத்தப்படலாம், இது மிகவும் சிக்கலானது, ”என்று அவர் கூறுகிறார். திரவநிலை பாலின அடையாளம் கொண்ட ஒரு நபர் பல பாலினங்களுடன் அடையாளம் காணும் ஒருவராவார். ஆனால், ‘நிலையற்ற பலினம்’ என்ற வார்த்தையானது ‘குழப்பம்’ என்ற பொருளைக் கொண்டுள்ளது, இது சிக்கலானது என்று பல பால்புது சமூகத்தினர் கூறுகின்றனர்.

இதையே தான் வண்டர்குழலியும் சொல்கிறார். ‘நிலையற்றப் பாலினம்’ என்ற சொல் நிச்சயமற்ற தொனியை வெளிப்படுத்துவதாகவும், “நம் பாலினத்தைப் பற்றி நாம் நிச்சயமற்றவர்கள் என்று சொல்வது சரியல்ல. ‘திரவநிலை/நீர்நிலை பாலினம்’ என்ற மாற்றுக் சொற்கள் சரியானதாக இருக்கின்றன,” என்கிறார்.

தமிழக அரசால் இந்த சொற்களஞ்சியம் வெளியிடப்பட்டாலும், அதன் தாக்கங்கள் தமிழ்நாட்டிற்குள் நின்றுவிடுவதில்லை என்றும் தமிழ் பேசும் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறது என்று ஹரி சுட்டிக்காட்டுகிறார். “தமிழகத்தில் என்ன நடந்தாலும் அது இலங்கையிலோ அல்லது தமிழ் பேசும் பிற இடங்களிலோ நம் மொழியை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பாதிக்கிறது. ‘திருநம்பி’, ‘திருநங்கை’, ‘திருநர்’ ஆகிய சொற்கள் இலங்கை, மலேசியா, ஐரோப்பா, கனடா மற்றும் பிற நாடுகளில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எந்த ஒரு சர்வதேச உள்ளீடும் இல்லாமல் இந்த அருஞ்சொற்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக வேறொரு இடத்தில் இருந்து ஒரு நபரை வேலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று நான் கூறவில்லை, ஆனால் மற்ற இடங்களில் தமிழ் பயன்படுத்தப்படும் விதத்திலும், மற்ற இடங்களில் மொழியின் பயன்பாட்டில் தமிழகம் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

“நாங்கள் தயாரித்த சொற்களஞ்சியம் சமூகத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது, ஆனால் இந்த சொற்களஞ்சியத்தில் பன்முகத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது,” என்று மௌலி கூறுகிறார். அரசாங்கம் ஒரு சொற்களஞ்சியத்தை அறிமுகப்படுத்துவது, ஊடகங்களில் இழிவான சொற்களின் பயன்பாட்டைக் குறைக்க உதவும் அதே வேளையில், LGBTQIA+ சமூகங்களைப் பாதுகாக்க, பாகுபாடு-எதிர்ப்புக் கொள்கைகளைக் கொண்டுவருவது உட்பட, அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டிய பிற நீண்ட கால நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட வேண்டியுள்ளன.

QCC-TNM ஊடக வழிகாட்டி பற்றிய குறிப்பு:

தி நியூஸ் மினிட் மற்றும் குயர் சென்னை க்ரோனிகிள்ஸ் LGBTQIA+ ஊடக வழிகாட்டியில் பணிபுரிந்து வருகின்றன. மேலும் இந்த ஆண்டு ஜூன் மாதம் வழிகாட்டியின் பகுதி 1 வெளியிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் சொற்களஞ்சியத்தின் பெரும் பகுதிகள் இந்த வழிகாட்டியின் சொற்களஞ்சியம் பிரிவில் இருந்து எடுக்கப்பட்டவை. வழிகாட்டியின் பகுதி 1-ஐ இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Tamil Nadu Government Gazette – Glossary of LGBTQIA+ English and Tamil | LGBTQIA+ சமூகத்தினருக்கான சொல்லகராதி ஆங்கிலம் மற்றும் தமிழில்