எதிர்வினை: ‘Homosexual Husband கிடைச்ச பொண்ணு ரொம்ப சந்தோஷமா இருப்பா’

Screen grab from the YouTube video

கடந்த செப்டம்பர் 2018-ல் இபிகோ பிரிவு 377 தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கலாட்டா தமிழ் யூடியூப் சேனலில் “Homosexual Husband கிடைச்ச பொண்ணு ரொம்ப சந்தோஷமா இருப்பா” என்கிற தலைப்பில் மருத்துவர் ஷாலினி, சமூக ஆர்வலர் ஷாலின் மரிய லாரன்ஸ், திரைப்பட இயக்குனர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்குபெற்ற உரையாடல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு நேற்று தான் அந்த வீடியோ காணக் கிடைத்தது.

பொதுவாக இம்மாதிரியான வீடியோக்களில் பார்ப்பவர்களைக் கவரும் விதமானத் தலைப்புகளை அந்த சேனல்களே வைத்து விடுவது வழக்கம். முழு வீடியோவைப் பார்க்கும்போது அந்த தலைப்புக்கும் வீடியோவுக்கும் சம்மந்தமே இருக்காது. ஆனால் வழக்கம்போல் மருத்துவர் ஷாலினி ஏமாற்றவில்லை. அவர் அந்தக் கருத்தை அந்த வீடியோவில் கூறி இருக்கிறார்.

பதினாறரை நிமிட வீடியோ முழுவதுமே பிதற்றலாகவே இருக்கிறது. நாம் தொடர்ந்து யாருடைய அரசியலை யார் பேச வேண்டும் என்கிற உரையாடலை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறோம். இப்போது எல்லா ஒடுக்கப்பட்ட மக்களைப் போலவே பால்புதுமையினரும், அவர்களது வாழ்வை அவர்களால் மட்டுமே சொல்லவும் எழுதவும் முடியும் என்கிற நிலை நோக்கி நகரத் தொடங்கி இருக்கிறோம். அம்மாதிரியான சமயத்தில் பால்புதுமையினரில் யாரையேனும் அழைத்து அவர்களை வைத்து உரையாடலை நிகழ்த்தி இருக்க வேண்டும்.

அல்லாமல் இபிகோ பிரிவு 377 ஓர்பாலீர்ப்பு, ஈர்பாலீர்ப்பு கொண்டவர்களுக்கு மட்டும் அல்லாமல் எதிர்பாலீர்ப்பு கொண்டவர்களுக்கும் எதிராகத் தான் இருக்கிறது என்கிற இடத்தில் டாக்டர் ஷாலினி, ஷாலின், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகிய மூவரும் அழைக்கப் பட்டிருந்தார்கள் எனில் “பிரிவு 377 க்கு பிறகு எதிர்பாலீர்ப்பு கொண்டவர்களின் வளர்ச்சி” என்கிற தலைப்பில் பேசி இருக்க வேண்டும். ஆனால் சம்மந்தமே இல்லாமல் மூன்று பெண்கள் ஓர்பாலீர்ப்பு கொண்ட ஆண்களைப் பற்றி “ச்சீ பாவம்ல!” என்கிற தொனியில் தவறான அரசியல் மற்றும் தவறான புரிதலோடு பேசிக் கொண்டேப் போகிறார்கள்.

இந்த உரையாடலில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் பங்கு மிகவும் சிறியது. பெரும்பான்மையான நேரங்கள் மருத்துவர் ஷாலினியின் உளறல்களை விழி விரியக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். அவர் இரண்டே இரண்டு இடங்களில் சோடமி என்றால் என்ன? பை-செக்சுவாலிட்டி என்றால் என்ன? என்று கேட்கிறார். மேலும் தான் குடும்பம், பெண்கள், குழந்தைகள் மாதிரியானவற்றில் கவனம் செலுத்துவதால் தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என அவர் கூறுகிறார். குடும்பங்களுக்கோ, குழந்தைகளுக்கோ, பெண்களுக்கோ பாலீர்ப்புடன் எந்த தொடர்பும் இல்லை, அது வேறு டிபார்ட்மென்ட், இது வேறு டிபார்ட்மெண்ட் என்கிற அளவுக்கு தான் அவரது அறிவு இருக்கிறது. பரவாயில்லை, மெதுவாகக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு ஓர்பாலீர்ப்பு கொண்ட பெண்களை வைத்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை எந்தப் புரிதலும் இல்லாமல் நடத்தியது தவறு என்றாவது அவர் இப்போது ஒப்புக்கொள்ள வேண்டும் தானே?
முதலில் சோடமியில் இருந்து தான் உரையாடல் தொடங்குகிறது. சோடமி சட்டத்தின் படி ஒரு ஆண் மற்றொரு ஆணை ஆசனவாய் புணர்ச்சி செய்வது குற்றம் என்கிறார் மருத்துவர் ஷாலினி. மறுபடியும் இந்த சட்டங்களை எல்லாம் கவனமாக ஓர்பாலீர்ப்பு கொண்டவர்களுக்கு எதிராகத் திருப்பும் ஒரு முயற்சி தான் இது. சோடமி சட்டத்தின் படி ஒரு பெண்ணை ஒரு ஆண் ஆசனவாய் புணர்ச்சி செய்தாலும் தவறுதான்.

“செக்ஸில் ஈடுபடுவது குழந்தைப்பிறப்புக்கு மட்டும் தானே? விலங்குகள் எல்லாம் அப்படித்தானே வாழ்கின்றன? மனிதர்கள் மட்டும் ஏன் சுகத்துக்காக செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும்?” என அப்பாவித்தனமான ஒரு கேள்வியை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கேட்கிறார். “இல்லை. விலங்குகளிலும் ஹோமோசெக்சுவல் விலங்குகள் உண்டு” என்பதோடு மருத்துவர் ஷாலினி நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் “பாலியல் இச்சை உள்ளவர்களால் குழந்தைப் பிறப்புக்கான செக்ஸில் ஈடுபடமுடியாதபோது இம்மாதிரியான ஓர்பால் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் தங்களது செக்சுவல் பிரஸ்ட்ரேசனைத் தீர்த்துக் கொள்ள முடியும்” என்கிறார். இந்த அளவுக்கு தான் பாலீர்ப்பு பற்றிய அவரது புரிதல் இருக்கிறது.

அடுத்து கொஞ்ச காலமாக செக்ஸ் வேண்டாம் என இருப்பது, குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வது, காண்டம் பயன்படுத்துவது. காலம் கடந்த திருமணத்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளாமல் இருப்பது என்று இருப்பது எவ்வளவு இயல்பானதோ அதுமாதிரி ஹோமோசெக்சுவாலிட்டி இயல்பானது என்கிறார். நம்முடைய தேவைகளுக்காக கொஞ்சகாலம் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டாம் என இருப்பது நாம் எடுக்கும் முடிவு. ஒருவரது பாலீர்ப்பு என்பது அவருடைய முடிவு அல்ல. ஒருவரது பாலீர்ப்பை தவிர்க்க முடிகிற சில செயல்களோடு ஒப்பிடும்போது ஏற்கனவே இருக்கிற குழப்பங்களை அது அதிகப்படுத்தவே செய்கிறது.

அடுத்ததாக ஓர்பாலீர்ப்பு கொண்ட ஆண்களைப் பெண்களுடன் ஒப்பிடுவதையும் டாக்டர் ஷாலினி தொடர்ந்து செய்கிறார். திருநர்கள் பெண்களுக்கான மூளையோடு இருக்கிறார்கள் என்கிறார். ஏற்கனவே இரண்டு மூன்று அண்ணன்கள் இருந்தால் அடுத்த குழந்தை ஹோமோசெக்சுவலாக இருக்கும் என்கிறார். அது கருவறையின் சூழல் சார்ந்த தவறு என்கிறார். இவ்வாறான பெரிய அளவில் நிரூபிக்கப்படாத தரவுகளுடன் அவர் பேசிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அந்த இடத்தில் சமூகம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது, சமூகம் அடுத்தவர்களின் உணர்வுகளுடன் உரிமைகளுடன் எவ்வளவு விளையாடுகிறது, அந்த சமூகத்தின் மனநிலைக்கான பின்புலம் பற்றியெல்லாம் தானே அவர் விவாதித்திருக்க வேண்டும்?
பிறகு அவர்கள் தனிமையானவர்களாகவும், வருத்தமானவர்களாகவும் இருப்பதால் போதைமருந்துக்கு அடிமையாகி இருப்பார்கள் எனவும் டாக்டர் கூறுகிறார்.
ஓர்பாலீர்ப்பு கொண்டவர்கள் மட்டுமே தனிமையானவர்கள், சோகமானவர்கள் என யார் டாக்டர் ஷாலினிக்கு சொன்னார்கள் எனத் தெரியவில்லை.
அறிமுகத்துக்குப் பிறகு அடுத்து ஒரு ஐந்து நிமிடத்துக்கு ஓர்பாலீர்ப்பு கொண்ட ஆண்களைப் புனிதப்படுத்துகிறார்கள்.

அவர்கள் உடல் தேவைகளுக்காக அலைபவர்கள் அல்ல, அவர்கள் ஒரு துணையைத் தேடுபவர்கள். அவர்கள் அன்பானவர்கள் ஏனெனில் அவர்கள் பெண்மையானவர்கள். ஒரு பெண்ணுக்கு ஹோமோசெக்சுவல் கணவன் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். ஆனால் அவரால் செக்ஸ் மட்டும் கொடுக்க முடியாது என்கிறார் டாக்டர் ஷாலினி. ஏற்கனவே ஓர்பாலீர்ப்பு கொண்டவர்களைப் பற்றிய எதிர்மறை ஸ்டீரியோடைப்புக்கு பதிலாக நேர்மறையான ஸ்டீரியோடைப்பை உருவாக்குகிறார்.
“நார்மல்” ஆண் பெண் உறவில் இருக்கும் பாலியல் வன்புணர்வுகள் எல்லாம் ஓர்பாலீர்ப்பு கொண்ட ஆண்களிடம் இருக்காது. அவர்களுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்” என்கிறார் ஷாலின். எதிர்பாலீர்ப்பை நார்மல் என இரண்டுமுறை அழுத்திச் சொல்வதன்மூலம் ஓர்பாலீர்ப்பு அப்நார்மல் ஆகிவிடுகிறது.
இவ்வாறாக கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட அந்த அரிய வகை உயிரினமான ஹோமோசெக்சுவல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து “ஓ! இது ரொம்ப அற்புதமா இருக்கு” என முடிக்கிறார்கள்.

தெரியாமல் தான் கேட்கிறேன், இவ்வளவு தவறான தகவல்களையும் கருத்துக்களையும் பேசுவதற்கான தைரியம் எங்கிருந்து வருகிறது? ஒரு ஆண் பெண்மையோடு இருப்பது பற்றிய உரையாடல்களுக்கெல்லாம் நான் போக விரும்பவில்லை. ஆண்மை, பெண்மை, ஆணுக்குள் பெண்மை, பெண்ணுக்குள் ஆண்மை என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நீங்கள் சொன்னது போல் பெண்மையாக இல்லாமல், உடல் தேவையை முக்கியமாக நினைக்கும் குழந்தைகளை அறவே வெறுக்கும் ஒரு ஓர்பாலீர்ப்பு கொண்ட ஆணைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்? வெட்டிக் கொன்று விடுவீர்களா?
பாலியல் வன்புணர்வுகள் ஓர்பாலீர்ப்பு கொண்டவர்களில் நடப்பதே இல்லை என்கிற தரவுகள் எங்கிருந்து கிடைக்கின்றன? எதிர்பாலீர்ப்பு கொண்டவர்களை வேறு வழியே இல்லாமல் உதாரணமாகக் கொண்டு வாழும் பால்புதுமையினர் சமூகத்திலும் பாலியல் வன்புணர்வுகள், வன்முறைகள், சாதிய வர்க்கப் பிரச்சினைகள் என எல்லாமும் தான் இருக்கின்றன. நாங்களும் அதைப் பற்றிய உரையாடல்களை வெளிப்படையாக நிகழ்த்துகிறோம். ஒப்புதலுடன் கூடிய உடலுறவு பற்றிப் பேசுகிறோம். அது எதையும் கவனிக்காமல் நீங்களாக வேறு எதையோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் தொடர்ந்து ஓர்பாலீர்ப்பு கொண்டவர்கள் நல்லவர்கள், அன்பாவனவர்கள் என ஏன் நிறுவிக் கொண்டே இருக்கிறீர்கள்? நாங்கள் வந்து சொன்னோமா உங்களிடம்? ஒருவேளை உங்கள் மொழியில் நாங்கள் கெட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் எங்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா? மேலும் உரிமைகள் இல்லை என்பதால் உங்களிடம் கேட்கும் நிலையில் இருப்பதால் நாங்கள் முழு உழைப்பையும் செலுத்தி உங்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமா?

அடுத்து கட்டை பிரம்மச்சாரிகள் எல்லாம் ஹோமோசெக்சுவல்கள் என்கிறார் ஷாலின். பிரம்மச்சரியம் மேற்கொள்ளுவது என்பது ஒருவர் எடுக்கும் முடிவாக இருக்கலாம், அதற்கு வேறு வேறு காரணங்கள் இருக்கலாம். அதற்கு அவர் ஹோமோசெக்சுவலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவரது பாலீர்ப்பு அவர் எடுக்கும் முடிவும் அல்ல. பிரம்மச்சரியம் ஒரு முடிவாக இல்லாமல் அவருக்கு செக்சில் நாட்டம் இல்லை எனில் அங்கு ஏ-செக்சுவாலிட்டி பற்றி நாம் பேச வேண்டும். எல்லாரையும் இறுதியில் ஹோமோசெக்சுவாலிட்டிகளாக அடையாளப்படுத்த முடியாது.

புனிதப்படுத்தும் பகுதி முடிந்ததும் கல்லால் அடிக்கும் பகுதி தொடங்குகிறது. ஓர்பாலீர்ப்பாளர்களைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் பீடோபைல்களைப் பற்றிய பேச்சு இல்லாமல் இவர்களால் முடிக்க முடியாது. சர்சுகளில் சிறுவர்களை பாலியல் வன்புணர்வு செய்யும் பாதிரிகளெல்லாம் ஹோமோசெக்சுவல்ஸ் என்கிறார்கள். அவர்களே தான் புனிதப் படுத்தும் செக்மண்டில் ஓர்பாலீர்ப்பு கொண்டவர்களுக்கிடையில் பாலியல் வன்புணர்வே கிடையாது என்றும் சொன்னார்கள்.

மேலும் சர்ச்சில் உள்ள பாதிரிகள் தைரியமாக செலிபசி ஓத் எடுப்பதே அவர்களுக்கு பெண்களின் மேல் ஈர்ப்பு இல்லாததால் தான். அதனால் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என காத்துக்கொண்டிருப்பார்கள் எனவும் மருத்துவர் ஷாலினி கூறினார்.
எனக்கு மருத்துவர் ஷாலினி மாதிரியான ஆட்கள் மருத்துவராகவும், போராளியாகவும். சமூக ஆர்வலராகவும் ஒரே நேரத்தில் இருப்பதில் பிரச்சினை இருக்கிறது. எல்லா மதமுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது தான். எல்லா மதங்களையும் தூக்கி எறிவதே அதற்கான தீர்வாகவும் இருக்க முடியும். சர்ச் பாதிரிகள் செய்யும் வன்புணர்வுகளையோ, குழந்தைகள் மேல் செய்யப்படும் வன்புணர்வுகளையோ ஓர்பாலீர்ப்பு பற்றிய ஒரு உரையாடலில் கொண்டு வந்து இணைக்க வேண்டிய தேவையில்லை. “ஏற்கனவே அவங்க பாவம்!” என்ற புனிதப்படுத்தும் உரையாடல், லெக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் பரிதாபமாகப் பார்க்கும் ஒரு குளோசப் ஷாட் என ஐந்து நிமிட உரையாடலை வீணாக்க வேண்டும்?

அடுத்ததாக ஓர்பாலீர்ப்பு கொண்ட ஆண்கள் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு முப்பது வயதுக்கு பிறகு உந்தப்பட்டு ஆண்கள் ஆண்களை பாலியல் தேவைகளுக்காக சந்திக்கும் “XXXX” எனும் ஒரு செயலியைப் பற்றி பேசுகிறார்கள். இறுதியில் இதிலும் பலிகடா பெண்கள் தான் என்று பெருமூச்சு விடுகிறார்கள். நிற்க.
“மென் மேட்டிங் மென் வெப்சைட் எல்லாம் இருக்கு. பொண்டாட்டிய விட்டு வேற ஆம்புளைங்களோட பேசுவாங்க. பேபின்னு கூப்புடுவாங்க. ஐ லவ் யூ சொல்லுவாங்க. “XXXX”அப்டின்னு ஆப் எல்லாம் இருக்கு. அங்க பிளாக்மெயில் நடக்க ஆரம்பிக்குது.” என புரணி பேசும் தொனியில் பேசிக் கொள்கிறார்கள். பிளாக்மெயில் என்ற வார்த்தையில் பரவசமாகிய லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் “வாட் இஸ் பிளாக்மெயில் மா?” என சொல்வதெல்லாம் உண்மைக்கு கண்டண்ட் தேற்ற வேறு முயற்சி செய்கிறார்.
இந்தியா ஓர்பாலீர்ப்பு கொண்டவர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பற்ற நாடு என்பது அனைவருக்கும் தெரியும். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆண்கள் ஆண்களை பாலியல் தேவைகளுக்காக சந்திக்கும் ஒரு இணையதளத்தில் ஹைதராபாத் டிவி9 ரிப்போர்டர்கள் அக்கவுண்டுகளை உருவாக்கி இளைஞர்களுடன் பேசி அந்த தொலைபேசி உரையாடல்களை அவர்களது புகைப்படங்களுடன் வெளியிட்டார்கள். அதில் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் வீட்டில் பெற்றோருடன் உணவு உண்ணும்போது அந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது. மற்றொரு இளைஞன் தற்கொலைக்கு முயன்று பெரும் போராட்டத்துக்குப் பிறகு காப்பாற்றப்பட்டான். இணையதளங்களிலும், செயலிகளிலும் காவலர்களும், ரவுடிகளும் இருந்து மிரட்டி பணம் பறிப்பதெல்லாம் இப்போதும் நடக்கிறது. அவ்வளவு தான் பாதுகாப்பு! நாங்கள் எங்களுக்குள்ளான உரையாடல்கள், நாங்கள் நண்பர்கள் என நம்பும் நபர்களது உரையாடல்கள் தவிர வேறு எங்கேயும் எந்த செயலிகள் பற்றியும் பேசுவதில்லை. அந்த குறிப்பிட்ட செயலியே மற்றவர்கள் கண்டுபிடிக்காமல் இருக்க ஆறு வேறுவேறு ஐகான்களைத் தருகிறது. இபிகோ பிரிவு 377 நீக்கப்பட்ட ஒரு வாரத்தில் எல்லாம் மாறி விட்டது போல நினைத்துக்கொண்டு அந்த செயலியின் பெயரை ஷாலின் கூறுவது போல் பொதுவெளியில் கூறுவதெல்லாம் ஏற்க முடியாதது. ஆதரவாளர் என்கிற பெயரில் அவர் ஓர்பாலீர்ப்பு கொண்டவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கவே செய்கிறார். மேலும் ஓர்பாலீர்ப்பு கொண்டவர்களை இருபாலீர்ப்பு கொண்டவர்கள் பாலியல் வன்புணர்வு செய்வது போலவும் பேசிக் கொள்கிறார்கள். பல இடங்களில் இந்த உரையாடல் பை செக்சுவல்களின் மேலான வெறுப்பாகவே இருக்கிறது.

அடுத்ததாக லெஸ்பியன் பெண்கள் பற்றி பேசுகிறார்கள். லெஸ்பியன் பெண்கள் ஹோமோசெக்சுவல் ஆண்களை விட வலிமையானவர்கள். அவர்கள் திருமணம் எல்லாம் செய்து கொள்ள மாட்டார்கள். ஹோமோசெக்சுவல் ஆண்களை ஒப்பிடும் போது அவர்கள் மீதான வன்முறை குறைவு என்கிறார்கள்.

ஒருவரை ஒப்பிட்டு மற்றொருவரை வலிமையாக்க வேண்டும் என்கிற அவசியம் எல்லாம் இல்லை. பெண்கள் இயல்பிலேயே வலிமையானவர்கள் தான். ஆனால் லெஸ்பியன் பெண்கள் திருமணமே செய்து கொள்ளாமல் உறுதியாக இருப்பார்கள் என்பதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்திய குடும்ப அமைப்புகளில் பெண்ணுக்கு தான் திருமணம் செய்து கொள்ளும் ஆணைத் தீர்மானிக்கும் உரிமையே இன்னமும் வரவில்லை எனும் போது லெஸ்பியன் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார்கள் என தான் பார்த்த ஒன்றிரண்டு உதாரணங்களை வைத்துப் பேசும் போது குடும்பத்தால் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட, ஆணவக்கொலை செய்யப்பட்ட லெஸ்பிதன் பெண்களின் கதைகளை எவ்வளவு அழகாக நிராகரிக்கிறீர்கள்? மேலும் வன்முறைகளின் ஒப்பீட்டைத் தாண்டி அதை எல்லாம் லெஸ்பியன் பெண்கள் தான் பேச வேண்டும். தனக்கு லெஸ்பியன் நண்பர்கள் இருப்பதாலும், பாரீனில் இருந்து வந்தவர்களைத் தெரியும் என்பதாலும் ஷாலின் முடிவு செய்து விட முடியாது.

இறுதியாக ஹோமோசெக்சுவல் ஆண்கள் அவர்களுக்காக பேசமுடியாது. ஒரு பெண்ணாக நாம் தான் அவர்களுக்காக பேச வேண்டும் என மூவரும் கூறுவதோடு உரையாடல் முடிகிறது. அதற்குப் பெயர் தான் அப்ராப்ரியேஷன். நீங்கள் யாரும் ஓர்பாலீர்ப்பு கொண்டவர்களுக்காகப் பேச வேண்டியதில்லை. அவர்களுக்காக அவர்கள் பேசிக் கொள்வார்கள். இப்போது கொஞ்சமாகப் பேசுகிறார்கள். நாளை இன்னமும் அதிகமாக. நாளை மறுநாள் அதைவிட அதிகமாகப் பேசுவார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது, அவர்கள் பேச வேண்டிய இடங்களில் உங்களைப் பேச அழைத்தால் புன்னகையோடு மறுப்பதும், அவர்கள் பேசும்போது உங்களைப் போன்ற எதிர்பாலீர்ப்பு கொண்டவர்கள் அவர்களைப் பேசவிடாமல் செய்தால் அங்கே குரல் எழுப்புவதும், அதைத் தட்டிக் கேட்பதுமே. மேலும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் சமுதாயத்தைக் கேள்வி கேளுங்கள். சமுதாயம் ஒடுக்கப் பட்டவர்கள் மேல் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் பற்றி பேசுங்கள். ஹோமோசெக்சுவல்களுக்கு வகுப்பு எடுக்காதீர்கள்.

~*~