காதல் தோழா – கவிதை

சென்னை குயர் இலக்கிய விழா 2020 — வாசிப்புமேடை

காதல் தோழா,

அன்று, என் பள்ளித்தோழன் – உன்னை நீங்கிப் பிரிந்தேன்,
உன் நன்மைக்காக.
என் காதல் மிகுதியால் உனக்கு இடைஞ்சல் கூடாதென்று.

ஈராண்டுகள் பின் என் நட்பே உயர்வென்றெண்ணி,
நட்பை மட்டும் நாடி வந்தாய் என்னிடம்.
என் காதலோ அந்நட்பையும் காதலித்ததால்,
நட்புறவாடினேன் உன்னிடம், என் காதலையும் மறைக்காமல்.
அதில் மீண்டும் உன் வயப்பட்டேன்,
ஞாலம் பதினெண் முறை ஞாயிறை சுற்றியது
உணராமல் உன்னையே சுற்றிவந்தேன்!
அந்நட்பின் பயனாய், நானே உனக்குப் பெண் பார்த்து,
மணம் முடித்தும் வைத்தேன், என் காதல் வலியை மறைத்து!

பின், இன்று ஏன் என் நட்பைக்கூட ஒதுக்கித் தள்ளுகிறாய்?
நான் உன்னைக் காதலித்ததுப் பற்றி, உன் தாரத்திடம் கூற இயலாதென்றா?
அல்லது, என் பாலீர்ப்பானது தற்போது உனக்கு அழுக்காய்த் தோன்றுகிறதென்றா?
இல்லை, உன்னைக் காதலிப்பதற்கு மற்றொருவர் வந்துவிட்டார் என்றா?
இல்லை, உன் சமூகச்சூழலில் நான் பொருந்தமாட்டேனென்றா?

அன்று உனக்காக உன்னை நீங்க முயன்றேன்.
இன்று எனக்காகவும்,
என் சுயமரியாதைக்காகவும், உன்னை நீங்க விழைகிறேன்.

அன்று, நீ பிறந்த ஆசிரியர் நாளே எனக்கு ஆசிரியர் நாளென்று எண்ணினேன்.
இன்று, நான் பிறந்த, பெரியாரின் பிறந்தநாளே எனக்கு ஆசிரியர் நாளென்பேன்!

அன்று, காதல் பகுத்தறிவை மறைத்தது.
இன்று, காதல், நட்பை விட சுயமரியாதையே முதன்மையென்றேற்று,
உன்னைப் பிரிகிறேன், என் நன்மைக்காக!

~*~*~