என்ன பேசுவதென்று தெரியவில்லை – கவிதை

சென்னை குயர் இலக்கிய விழா 2020 — வாசிப்புமேடை

டப்…

அந்த பிளவுண்ட விதை

சிதறல்களாய் வெடித்து விழுந்தது.

சதைத் துணுக்குகள்

கூடியிருந்த உருளைகளில்

பட்டுத் தெறித்தன.

எல்லா சதைகளும்

உடனுக்குடன் உள்ளிழுக்கப்பட்டன.

உருளைகளில் ஒட்டிய ரத்தம் கூட

சட்டென்று காணாமல் போனது.

அங்கொரு உருளை

நெகிழ்ந்து வழவழப்பாய்

தலை நிற்காத குழந்தையின்

மென்மையோடு

இறுக்கமின்றி இருந்தது.

அதன்மேல் இருந்த சதைத் துணுக்கை

என்ன செய்வதென்று

அதற்குத் தெரியவில்லை.

அதற்குக் கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது.

அப்போது

அதன் கண்முன்னே அந்த சதைத் துணுக்கு

ஒரு புது விதையானது.

நடுவில் புது பிளவோடு

அது மினுங்கிக்கொண்டு உயிர் பெற்றபோது,

அந்த குழந்தையான உருளைக்கு

என்ன பேசுவதென்று தெரியவில்லை.

~*~*~

நேற்றைய இரவில்V-neck நைட்டியை

இரண்டாய்ப் பிளந்து வீறிட்டவளை

அமைதிப்படுத்த

உடனுக்குடன் துண்டு எடுத்து போர்த்தினர்.

அது பறந்து முகத்தில் அடித்து

முறிந்து விழுந்தது.

கடைசியில் வந்துசேர்ந்த அமைதி

இரைச்சலாய் எரிந்தது

முறிந்த துண்டை ஒத்திருந்தது.

பின்னொருகோடைமழைநாளில்

செல்ல மரம் ஒன்று

பற்றி எரிந்தது.

எரிந்த மரத்தில் உயிர் தழைக்காதென

இறுக்கிப் பூட்டிக்கொண்டு

நான் கிளம்பினேன்.

ஓர் அதிகாலையில்

கடலோரத் தென்னையடியில்

ஏங்கி செத்திருந்த வாழைக்கனியை

எனது வாயில் எடுத்தேன்.

சுருங்கிய பலம் தோய்ந்த கைகள்

என்னைத் தொட்டுத் தேய்ந்திருந்த காலத்துள்

நுழைந்து

நிமிடங்களில் வாழ்ந்து பார்த்தன.

அன்றோடு நான் செத்துப்போய்

ஒரு மாதம் கழிந்திருந்தது.

சுடு வெயில்

என் பிணத்தை எரித்தது.

பனிக்கால இரவில் ஒருவன்

அவனது நீள்சட்டையை

எனக்குப் போட்டுவிட்டான்.

அடுத்தநாள்

எனது சேலையை அவன் உடுத்திக்கொண்டான்.

எனது சேலை

சிறகாய் மாறியிருப்பதை

அன்று நான் பார்த்தேன்.

நான் செத்துப்போன

ஆறாம் மாதம் அது.

அடுத்த ஆறு மாதங்களில்

என் பிணத்தில் மெல்ல சூடேறியது.

ஒரு வருடம் கழித்து

செல்ல மரத்தைக் காண வந்தேன்,

அது துளிர்த்திருந்தது.

V-neck நைட்டியைத்

தைத்துப் போட்டிருந்தவள்

தனது தள்ளுவண்டியில் சுட்ட இட்டிலிகளை

எனக்கு நீட்டினாள்.

~*~*~