சாகித்ய அகாடமியின் Festival Of Letters 2020ல் தமிழ் பால்புதுமையினரின் குரல்

சாகித்ய அகாடமியின் “Festival Of Letters 2020” பிப்ரவர் மாதம் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்தியா முழுவதும் இருந்து பலமொழிகளில் எழுதும் எழுத்தாளர்களின் அமர்வுகளும், கவிதை வாசிப்புகளும் நடைபெற்றன. சாகித்ய அகாடமி விருதுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் ஒருபகுதியாக பால்புதுமையினர் கவிஞர்களுக்கான கவிதை வாசிப்பு நடைபெற்றது. இவ்வாசிப்பில் இந்தியா முழுவதும் இருந்து பத்தொன்பது கவிஞர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இந்தியா முழுவதும் என்றாலும் கூட தென்னிந்தியாவிலிருந்து மூவரும், வடகிழக்கு இந்தியாவிலிருந்து ஒருவரும் தவிர மற்றவர்கள் இந்திமொழிப் பேசும் பகுதியிலிருந்து வந்திருந்தனர்.

இரண்டுமணிநேரம் நடைபெற்ற இவ்வாசிப்பில் கவிஞர் ஹொஷாங் மெர்சண்ட் மற்றும் எழுத்தாளர் ராஜ் ராவ் சிறப்புரையாற்றினர்.

கவிஞர் அழகு ஜெகன்

பின்னர் நடைபெற்ற கவிதை வாசிப்பில் கவிஞர்கள் தங்களது கவிதைகளை வாசித்தனர். கர்நாடகாவைச் சார்ந்த சாந்தினி தனது கன்னடக் கவிதையை ஹிந்தியில் மொழிபெயர்ப்பு செய்து வாசித்தார். மொழிபெயர்ப்பு செய்வதன் சிரமங்களையும், அதை இந்தியில் வாசிப்பதிலுள்ள சிரமங்களையும் தனது வாசிப்பினிடையே அவர் தெரிவித்தார். சிந்திமொழியைத் தாய்பமொழியாகக் கொண்ட விஷால் பிஞ்சானி அம்மொழி அழிந்து வருவது குறித்த தனது கவிதையைப் பதிவு செய்ததோடு தனது கவிதைகளை சிந்தியிலும் வாசித்தார். டேனியல் உருதுமொழியில் எழுதப்பட்ட தனது கவிதைகளை வாசித்தார். மணிப்பூரிலிருந்து வந்த ஷாந்தா குரை தனது பாலின அடையாளத்தை பெற்றோரிடம் வெளிப்படுத்துவது குறித்த கவிதையை வாசித்தார். அலாகாபாதிலிருந்து வந்த தோஷி பாண்டே ஹிந்தி மட்டுமே பேசும் தனக்கும் தன்னுடைய தமிழ் பேசும் காதலியும் பேசிக்கொள்வது பற்றி கவிதை வாசித்தார்.

கவிஞர் கிரீஷ்

தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொண்ட கிரீஷ் மற்றும் அழகு ஜெகன் தங்களது கவிதைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் வாசித்தனர்.

அழகு ஜெகனின் கவிதைகள் பால்புதுமையினர் மீதான ஒடுக்குமுறைகள் குறித்ததாக இருந்தது. கிரீஷ் தமிழில் எழுதும் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தெரியாத ஒரு மொழியில் வாசிப்பதைக் குறித்த தனது வருத்தத்தை அறிமுகத்தில் பதிவு செய்தார். கிரீஷின் கவிதைகள் பால்புதுமையினரின் மனநலம் சார்ந்ததாக இருந்தது.

பால்புதுமையினரின் காதல், எங்களது வலிகள், பொதுச்சமூகத்தால் அவர்கள் மேல் நடத்தப்படும் வன்முறைகள் என இருந்த இந்த கவிதை வாசிப்பு அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு புரிதலை நிச்சயமாக ஏற்படுத்தி இருக்கும்.

2019-ம் ஆண்டு சாகித்ய அகாடமி திருநங்கைகளுக்கான கவிதை வாசிப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

~*~*~