“நாங்களும் இருக்கிறம்” — ஆவணப்படத் திரையிடலும் உரையாடலும்

விதை குழுமம்

பட உதவி — வினிசாந், பிரசாந்

யாழ்ப்பாணத்திலிருக்கின்ற மாற்றுப் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களையும் அவர்கள் மீது திணிக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகளையும் ஒதுக்கல்களையும் சந்திப்புகளின் மூலமாகவும் உரையாடல்களினூடாகவும் ”நாங்களும் இருக்கிறம்” என்கிற ஆவணப்படமாக தொகுப்பாக்கியிருக்கின்ற பிறைநிலா கிருஷ்ணராஜாவின் ஆவணப்பட வெளியீடும் உரையாடலும் நேற்றைய தினம், (15. 09. 2019) ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாண நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. முன்னதாக குவிமாடக் கேட்போர் கூடத்தில் இடம்பெறுவதாக இருந்த நிகழ்விற்கான ஏற்பாடு நூலகத்தினரின் வேண்டுகோளிற்காக கேட்போர் கூடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட கால தாமதத்தினால் நிகழ்வு 10. 30 க்கு ஆரம்பமாகியது.

நிகழ்வு பிரிந்தாவின் ஆரம்ப உரையுடன் தொடங்கியது, அடுத்ததாக இறுவெட்டினை தேன்மொழி, ரொஷானி, ஏஞ்சல் வெளியிட யாழ் பல்கலைக்கழக ஊடகக்கற்கையின் துறைத் தலைவர் கலாநிதி எஸ். ரகுராம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அதன் பின் ரகுராம் ஆவணப்படம் குறித்து சிறு உரையாற்றினார்.

இயக்குனர் பிறைநிலா கிருஷ்ணராஜா, ஆவணப்படம் தொடர்பான தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு ஆவணப்பட உருவாக்கத்திற்கு உதவியவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

பின்னர், தேன்மொழி, ரொஷானி, ஏஞ்சல் ஆகியோர் மாற்றுப் பால்நிலையினரின் இருப்பும் சிக்கல்களும் என்ற அரங்கில் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தனர். குறித்த அரங்கில் பிறைநிலா கிருஷ்ணராஜாவும் கலந்து கொண்டார், அரங்கை பிரிந்தா நெறிப்படுத்தினார். பேச்சாளர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து பார்வையாளர்கள் தரப்பிலிருந்து பல்வேறு கருத்துக்களும் பயன்மதிப்பு வாய்ந்த உள்ளீடுகளும் வழங்கப்பட்டன. பலரும் தங்களுடைய ஆதரவையும் தோழமையையும் மாற்றுப்பால் நிலையினரின் உரிமைகளுக்காகச் சேர்ந்து பயணிக்கும் விருப்பையும் தெரிவித்தனர்.

மாற்றுப்பால் நிலையினர் குறித்த சித்தரிப்புகள், சொற் பயன்பாடுகள், பெண்ணிலைவாதம், யாழ்ப்பாண சமூகத்தில் இந்தச் சிக்கல்கள் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றன என்பன தொடர்பான காரசாரமான ஆரோக்கியமான விவாதங்கள் இடம்பெற்றன.

எல்லா வகையான ஒதுக்கல்களுக்கும் எதிராகச் செயலாற்றி மாற்றுப்பாலினத்தவர்களுக்கான சமூகநீதி கிடைக்கவேண்டும் என்ற நோக்குடையவர்களுக்கும் மாற்றுப்பாலினருடன் உரையாடிச் செயற்படுவதற்கான ஒரு பொதுவெளியைத் திறப்பதை நோக்காகக் கொண்ட இக் கலந்துரையாடல் தன்னளவில் நிறைவான தொடக்கம். பாற்புதுமையினர் பற்றித் தொடர்ந்து செயற்படும் செயற்பாட்டாளர்களின் உழைப்பையும் அக்கறையயும் உள்ளீர்த்தே நாம் இந்த நிறைவை அடைந்துள்ளோம்.

நாம் வாழும் சமூகத்தில் நிகழும் எல்லா வகையான அசமத்துவங்களையும் களைந்து சமூகநீதிக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் குரலெழுப்பி பொதுவெளியில் உரையாடல்களை உருவாக்குவதைத் தன் நோக்குகளில் ஒன்றாகக் கொண்ட விதை குழுமம், பாற்புதுமையினரின் சமூக ஏற்பிற்கான நீண்ட பயணத்தில் தொடர்ந்தும் செயலாற்றும். நிகழ்வில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்தவர்களுக்கும் உடனிருந்தவர்களுக்கும் தோழமையான நன்றிகள்.

மூலம்: விதை-vithai — https://www.facebook.com/607026622683610/posts/2607192526000333/

பாற்புதுமையினர் பற்றிய அறிதலும் சமூக ஏற்பிற்கான பயணமும் “நாங்களும் இருக்கிறம்” ஆவணப்பட வெளியீட்டில் பிரிந்தாவினால் ஆற்றப்பட்ட ஆரம்ப உரை

~*~*~