“Me Too” எனும் சொற்றொடர், ஆஃப்ரிக்க-அமெரிக்க குடியுரிமை போராளியும், செயற்பாட்டாளருமான டரானா பர்க் (Tarana Brukes) என்பவரால் வடிவமைக்கப் பட்டது. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்னர், 2006இல் இளைஞர்களுக்கான முகாம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த டரானா, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு சிறுமி தன் கதையை பகிரும்போது முழுதாய் கேட்காமல் வேறு ஒருவரிடம் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். அதன் பிறகு அந்த சிறுமி திரும்பி வரவே இல்லை. அந்த நொடியில் தான், ‘ஏன் என்னால் Me Too என்று சொல்ல முடியவில்லை?’ என்று டரானா யோசிக்கத் தொடங்கியிருக்கிறார். “Me Too” என்று சக பெண் ஒருவருக்கு தெரிவிப்பதனால், அவருடைய தனிமையும் பயமும் தயக்கமும் உடைந்து போகிறது என்பதை உணர்ந்ததில் இருந்து தொடர்ந்து இந்தப் பெயரில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக இயங்கிக் கொண்டே இருக்கிறார் டரானா பர்க்.
2017 ஆம் ஆண்டில், #MeToo என்ற ஹாஷ்டாக்கை பயன்படுத்தி, “பாலியல் துன்புறுத்தல்/அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் அனைவரும் ‘Me Too’ என்று கூறினால், இது எவ்வளவு பரவலான பிரச்சனை என்று மக்களுக்கு புரியும்” என ஊக்குவித்தார் அமெரிக்க நடிப்புக் கலைஞர் அலிஸா மிலானோ (Alyssa Milano). ஹாலிவுட்டின் பிரபல படத் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டெயின் (Harvey Weinstein) மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் வீரியத்தை புரியவைக்கவே இதை அவர் தொடங்கினார். பெண்களில் பெரும்பாலானோர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது அப்பட்டம் என்றாலுமே, இத்தனை பேர் துணிச்சலாய் தங்கள் கதைகளை சொல்வார்கள் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
துணிச்சலாய் கதை சொல்பவர்களுக்கும் இத்தனை பெண்கள் ஆதரவளிப்பார்கள் என்றும் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. தாங்கள் தாக்கப்பட்டதாக (துன்புறுத்தப்பட்டதாக) சொல்லும் பெண்களிடம் ‘ ஏன் இதை முன்னரே சொல்லவில்லை?’ ‘ ஒருவேளை நீங்கள் குறிப்பிடும் அந்த நபர் தவறு செய்திருக்கவில்லை என்றால் அவருடைய வாழ்க்கை நாசமாகிவிடாதா?’ என்ற கேள்விகள் வேண்டுமானால் கேட்கப்படும் என்பது கொஞ்சம் எதிர்பார்க்கப்பட்டது தான்.
க்வெனித் பால்ட்ரோ (Gwyneth Paltrow), சல்மா ஹயெக் (Salma Hayek) என ஏகப்பட்ட கலைஞர்கள் தாங்களும் ஹார்வி வெயின்ஸ்டெயினால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக முன் வந்தார்கள். ஹாலிவுட்டின் பிரம்மாண்ட விழா நிகழ்வு ஒன்றில் #TimesUp என்ற கோஷத்தை முன் வைத்து பெண்கள் அத்தனை பேரும் கருப்பு உடுத்தி பங்கேற்றார்கள். ஹாலிவுட்டில் #MeToo பரவும் போதே, இந்தியாவில் அதன் தாக்கம் ஓரளவில் இருந்தது. சமுக வலைதளங்களில் பலரும் #MeToo பயன்படுத்தி தங்கள் கதைகளை பகிரத் தொடங்கினார்கள். பிற சமுக வலைதள டிரெண்டிங்குகளை போலவே #MeToo வற்றிப் போனதாகவும், முடிந்து போனதாகவும் கருதப்பட்டது.
இந்தியாவில், #MeToo-வின் தொடக்கமாக ரயா சர்க்காரின் ‘தி லிஸ்டை’ (The List; LoSHA — List of Sexual Harassers in Academia) சொல்கிறார்கள். ஹாலிவுட்டில் நடந்த #MeToo இயக்கத்தின் தாக்கத்தால், ரயா சர்க்காரும், இஞ்சி பெண்ணும் இந்திய கல்வி நிலையங்களில் மாணவர்களையும், பிறரையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய கல்வியாளர்களின் பட்டியல் ஒன்றை தயாரித்தனர். இது வெளியிடப் பட்டவுடன் #MeToo-வின் மீதும், ரயா சர்க்கார் வெளியிட்ட ‘தி லிஸ்டின்’ மீதும் பரவலாகவே விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ‘தி லிஸ்ட்’ ஒரு வகையில் #MeToo-வை முன்னகர்த்தி சென்றது என்றாலும், இந்தியாவில் #MeToo-வின் தொடக்கமாக அதை சொல்லலாமா என்பது கேள்வியாகவே இருக்கிறது. ஒரு பெண் தன் கதையை பகிர்ந்து கொள்வதற்கும், பலரிடம் தகவல் திரட்டி ஒரு பட்டியல் தயாரிக்கப் படுவதற்கும் இருக்கும் வித்தியாசம் தான் எனக்கு இந்த கேள்வி உதிக்க காரணமாய் இருக்கிறது.
2009-ல் தனுஸ்ரீ தத்தா, படப்பிடிப்பு ஒன்றில் நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதை ஊடகத்திற்கு மறுமுறை 2018-ல் நினைவூட்டியதில் இருந்து #MeToo இயக்கம் இந்தியாவில் புத்துயிர்ப்பு கொண்டது. ஊடகவெளியில் நடக்கும் துன்புறுத்தல்கள் அம்பலமாகின. ஊடகவியலாளர் ப்ரியா ரமணி தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் என பெயரை வெளியிட்டார். ப்ரியா ரமணி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னர் எம்.ஜே.அக்பர் பதவி விலகினார். #MeToo-விற்கு கிடைத்த பெரிய வெற்றியாக இது பார்க்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஒரு பெண், பாடலாசிரியர் வைரமுத்து தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றதாக குறிப்பிட்டார். அதன் பின்னர் பாடகர் சின்மயி , பாடலாசிரியர் வைரமுத்து தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக ட்விட்டரில் தெரிவித்ததில் இருந்து #MeToo பிரபலமானது. வைரமுத்து மீது வேறு சில பெண்களும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை 2005 ஆம் ஆண்டில் சுசி கணேசன் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதை விரிவாக எழுதினார். நடிகர் அமலாபாலும் சுசி கணேசனின் முறை தவறிய நடவடிக்கைகளை குறித்து எழுதி லீணா மணிமேகலைக்கு ஆதரவு அளித்திருந்தார். சமீபத்தில் நடிகர் ஸ்ருதி ஹரிஹரன், ‘நிபுணன்’ படப்பிடிப்பில் அர்ஜுன் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது குறித்து எழுதியிருந்தார். இவ்வாறாக முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே #MeToo இயக்கத்தை முன்னோக்கி எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.
பெண்களால் மட்டுமே #MeToo முன்னோக்கி நகரும் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. குற்றச்சாட்டுக்களிலும், குற்றவுணர்விலும் இருந்து தப்பிக்க நினைக்கும் ஆண்கள் ஆயுதமாக எடுப்பது ‘ ஏன் சம்பவம் நடந்து இத்தனை வருடங்கள் பேசவில்லை?’ ‘ ஏன் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள்’, ‘ பெண்களை புரிந்து கொள்ள முடியவில்லை’ போன்ற வாக்கியங்களை. பாமர மக்கள் தொடங்கி ஊடகங்களில் பெரிய நிலைகளில் இருப்பவர்கள் வரை, பெரும்பான்மையான ஆண்கள் பாலியல் துன்புறுத்தலை இவ்வாறாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் அல்லது அப்படித்தான் புரிந்து வைத்திருப்பதாக நடிக்கிறார்கள். ஆண்களுக்கே சாதகமாக இருக்கும் இந்த அமைப்பை #MeToo கேள்வி கேட்பதையும் ஆண்களால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.
#MeToo சில விளக்கங்கள்:
1) ஏன் முன்னரே சொல்லவில்லை
ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை குறிப்பிட்ட கால அளவிற்குள் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நிர்ணயிக்க ஆண்களுக்கு உரிமையும், தகுதியும் இல்லை. இன்னமும் கூட, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளாத பெண்கள் இருக்கிறார்கள். #MeToo இயக்கம் பெண்கள் தங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு, தான் விரும்பும் நேரத்தில் தன் கதையை பகிர்ந்து கொள்வது குறித்தது.
2) சட்ட ரீதியான நடவடிக்கைகள்
#MeToo பெண்கள் பேசுவது பற்றியது. பெண்கள் பேசுவதனால், ஆண்களுக்கு அசௌகரியமாக இருக்கிறது எனப் பெண்களை பேசாமல் இருக்கச் சொல்ல முடியாது. பெண்கள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். பெண்கள் பேசுவதை இடையூறு செய்யாமல் பிறர் கேட்டுத் தான் ஆக வேண்டும். சட்டரீதியான நடவடிக்கையோ, பேரணியோ — எதுவாக இருந்தாலும் பெண்களே முடிவு செய்வார்கள்; மற்றவர்கள் அறிவுரை தேவையே இல்லை.
3) பெண்களை புரிந்து கொள்ளமுடியவில்லை
Consent-ஐ புரிந்து கொள்வது எளிமையானது. இல்லை, உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதென்றால், பார்ட்னரிடம் வாய் திறந்து கேட்க வேண்டும். மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதெல்லாம் உணர்வுப்பூர்வமாக தெரிந்திருந்தாலும் கூட, அதை மறுத்து செயல்பட வைப்பது Male privilege என்பதை உணர வேண்டும்.
4) சின்மயி தன் திருமணத்திற்கு வைரமுத்துவை வரவேற்றிருந்ததும் கூட அவருக்கு எதிராக பேசப்பட்டது. யதார்த்தத்தில், தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நபர் மீது தப்பே இல்லை, தப்பெல்லாம் தன் மீது தான் என ஒவ்வொரு பெண்ணும் நினைக்குமளவு ஆண்களின் குற்றங்கள் கழுவப்பட்டுக் கொண்டே இருக்கும் தேசம் இது. ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’, ‘ நீ ஒழுங்கா நட’ என்பதெல்லாம் தான் சராசரியாக பாலியல் துன்புறுத்தலை வெளியில் சொல்லும் போது கேட்கும் பதில்கள். எதுவுமே நடந்துவிடவில்லை என்பது போல, சாதாரணமாக நடந்துக் கொள்ளும் நிலைக்கு பெண் தள்ளப்படுகிறாள். இன்னமுமே, வீடுகளிலும், கல்வி நிலையங்களிலும், அலுவலகங்களிலும் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நபரோடு வாழும், வேலை செய்யும், சகித்துக் கொண்டு சுவாசிக்கும் நிலையில் இருக்கும் பெண்கள் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள். இதுவே இயல்பானதாக உருவகிக்கப் பட்டிருக்கிறது. எந்த மனநிலையில் வைரமுத்துவை சின்மயி தன் திருமணத்திற்கு வரவேற்றிருப்பார் என்பதை புரிந்து கொள்ளாதவர்கள் ஆணாதிக்கத்தின் தூதர்களாக இருப்பார்கள் என்பதை தவிர வேறு விளக்கம் இல்லை.
5) திராவிடத்தை ஆதரிப்பதனால், பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பார்ப்பன பெண்ணை character assassinate செய்யும் டிரெண்டும் உருவானது. இன்னமும் கூட நடந்து கொண்டிருக்கிறது. Inclusiveness இல்லாத திராவிடம், Inclusiveness இல்லாத பெண்ணியம் ஆகிய இரண்டுமே நேர்மையான சித்தாந்தங்கள் கிடையாது — வெறும் வன்மமும், பாகுபாடும்,ஆணாதிக்கமும் நிறைந்ததாகவே இருக்கும்.
6) #MeToo-வை வைத்து ஜோக்குகளும், காமக் கதைகளும் எழுதி பேஸ்புக்கில் லைக்குகள் வாங்கி ஆசுவாசமாகிக் கொண்டிருந்தனர் சில முகநூல் பிரபலங்கள். மேலும் சிலர் ஆண்களாக தாங்களும் பாதிக்கப்பட்டிருப்பதனால் பெண்கள் மட்டுமே புலம்பிக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் எழுதினார்கள். குறைந்த சதவிகிதம் ஆண்கள் மட்டுமே பெண்களுக்கு பேச இடம் கொடுங்கள் என்றும், பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் எழுதியிருந்தார்கள். எழுதி எழுதி களைத்து போய் இருந்த எனக்கு தனித்து போராடுவதை போன்றதொரு பயம் வந்திருந்தது. அந்த பயம் தான் இது முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நடக்கும் ஒரு இயக்கம் என்பதையும் காட்டிக் கொடுக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
(இவையெல்லாம் பல நூறு முறை எழுதப்பட்ட, பேசப்பட்ட விஷயங்கள் தான் என்றாலும், சில சமயங்களில் திரும்பி திரும்பி சொல்வதனால் முட்டாள்களுக்கு உறைக்கும் என நம்பப்படுகிறது.)
அறம் இல்லாத தமிழ் ஊடகம்!
‘ஏன் இத்தனை காலம் பேசாமல் இப்போது பேச வேண்டும்’ எனக் கேட்கும் அதே ஊடகம் தான், துணிச்சலை திரட்டிக் கொண்டு பேசும் பெண்களை அவமானப்படுத்தி, அவர்களை பொய்யர்களாகவும், குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஆண்களை புனிதர்களாவும், மனித குலத்தையே ரட்சிக்க வந்தவர்களாகவும் சித்தரிக்கிறது. சமீபத்தில் நடிகர் ஸ்ருதி ஹரிஹரன் நடத்திய ஊடக சந்திப்பில் கூட, ‘அர்ஜுனிடம் மன்னிப்பு கேட்பீர்களா’ எனக் கேட்ட பத்திரிக்கையாளர்கள், அர்ஜூனிடம் சென்று ‘உங்கள் வீட்டில் எல்லாரும் இதை எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்’ எனக் கேட்டிருக்கிறார்கள்.
பாலிமர் தொலைக்காட்சி ‘ சிக்கினார் சின்மயி’ என்று தலைப்பெழுதி ஒரு செய்தியை வெளியிடுகிறது. நடந்த சம்பவத்தை லீனா மணிமேகலை தெளிவாக எழுதியிருந்த போதும் கூட, ஹோம் வொர்க் செய்யாமல் வந்த பாலிமர் தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் ‘ என்ன சம்பவம் நடந்தது என்பதை விவரியுங்கள்’ என அறிவே இல்லாமல் கேட்டுவிட்டு அதை நியாயப்படுத்தவும் செய்கிறார். பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம், திரும்ப திரும்ப அந்த சம்பவத்தை நினைவுபடுத்துவதனால், அவருடைய மனநலன் என்னவாகும் என்பதை கூட புரிந்து கொள்ளாத அடிமுட்டாள்களாக இருக்கிறார்கள் பெரும்பான்மையான ரிப்போர்ட்டர்கள்.
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியதால் வாழ்க்கை நாசமாக்கப்பட்ட ஒரு ஆணின் பெயரைக் கூட நம்மால் சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், இனி அர்ஜுனை வைத்து ஒரு ஹிட் கொடுத்து அர்ஜுனுக்கு ‘கம் பேக்’ கொடுக்க வேண்டும் ஒரு குழு இந்நேரம் தயாராகியிருக்கும். இவ்வளவு அபத்தத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கு தமிழ் ஊடகத்தை என்னவென்று எழுதுவது? பாரம்பரிய ஊடகத்தால் #MeToo இயக்கத்தை நகர்த்தவே முடியாது. ஏனென்றால், பாரம்பரிய ஊடகமே பிற்போத்தனம் நிறைந்ததாகவும், வலது சாரியாகவும் இருக்கிறது. இதில் ஊடகவியலாளர் அந்தஸ்தை பயன்படுத்தி சலுகைகளை பெற நினைக்கும் ஊடகவியலாளர்கள் தான் பெரும்பான்மை. ஊடகவியலாளர்கள் எல்லாரும் காமன் சென்ஸ் இருப்பவர்களாக இருக்க வேண்டும் என நாம் ஆசைப்படுவது கூட பேராசையாக தெரிகிறதென்றால், எந்தளவு முட்டாள்தனத்திற்கு நாம் ஓகே சொல்லியிருக்கிறோம் என்பதை யோசிக்க வேண்டும். இனி எந்தளவு கண்டனங்கள் தெரிவிக்க வேண்டும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
அதே சமயத்தில், தமிழ் பத்திரிக்கைள், #MeToo சர்ச்சை/விவகாரம் என எழுதி வருகிறது. தற்போது தமிழ் ஹிந்து நாளிதழ் மட்டும் #MeToo இயக்கம் என மாற்றியிருக்கிறது. #MeToo-வை நியாயமாக கையாள்வதையும் பாராட்ட மட்டுமே முடிகிறது. #MeToo சமுக வலைதளங்களில் தொடங்கியது. பாரம்பரிய ஊடகத்தின் ஆதரவு இல்லாமலே #MeToo முன் செல்லும். இனி துணிந்து பேசும் ஒவ்வொரு பெண்ணிடமும் #MeToo கொடுத்த நம்பிக்கை இருக்கும்.