பால்புதுமையினரும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா 2019ம்

2019, நவம்பர் மாதம் மத்திய அரசு திருநர்களுக்கு எதிரான மசோதாவை (Transgender Persons (Protection of Rights) Act 2019), ஆதரவான மசோதா என்ற பெயரில் திருநர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கொண்டு வந்து சட்டமாக்கியது. அதற்கான போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த அடியாக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவைக் (Citizenship Amendment Act — CAA)கொண்டு வந்திருக்கிறது. மேலும் அஸ்ஸாமில் நடைமுறையில் இருந்த குடிமக்கள் தேசியப்பதிவை (National Register of Citizens of India — NRC) நாடுமுழுமைக்குமாக அமல்படுத்துகிறது.

சட்டவிரோதமாகத் தங்கி இருக்கும் மக்களை வெளியேற்றும் நோக்கில் இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக அரசு தெரிவித்தாலும் அடிப்படையில் இச்சட்டங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. அனைத்து சாதிகளிலும், வர்க்கங்களிலும், மதங்களிலும் பால்புதுமையினர் இருக்கும் சூழலில் இச்சட்டங்கள் பால்புதுமையினரையும் (Queer) கடுமையாக பாதிக்கிறது. குறிப்பாக திருநர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். பலவித இன்னல்களால் வீடுகளில் இருந்து வெளியேறும் திருநர்கள் தங்களது ஆவணங்களை எடுத்துச்செல்லவோ கையில் வைத்திருக்கவோ முடியாது. அவற்றைத் திரும்பப் பெறுவதும் நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. இச்சட்டங்களின் மூலமாக அவர்கள் எல்லாரும் ஆவணங்கள் இல்லாதவர்களாகிறார்கள். பால்மாற்று அறுவை சிகிச்சை செய்த திருநர்கள், பெயர் மாற்றம் செய்து கொண்ட திருநர்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

பல்வேறு காரணங்களுக்காக இடம்மாறி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் திருநர்களின் மக்கள்தொகையைக் கணக்கெடுப்பது கடினமான ஒன்று. பத்திரிக்கைச் செய்திகளின் அடிப்படையில் அஸ்ஸாமின் குடிமக்கள் தேசியப்பதிவின்படி ஒரு மாவட்டத்தில் மட்டும் 2000 திருநர்கள் இந்தியக் குடியுரிமையை இழக்கிறார்கள். இந்தியா முழுமைக்குமாக இச்சட்டத்தை விரிவுபடுத்தும்போது இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும்.

ஏற்கனவே சொந்த நாட்டிலேயே கல்வி, வேலைவாய்ப்பு, உணவு, மருத்துவம் என அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழும் திருநர்களை சொந்த நாட்டிலேயே அகதியாக்கும் செயலைத்தான் இந்தச் சட்டங்கள் செய்கின்றன. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும், பன்முகத்தன்மைக்கும் எதிரானதாகவே மத்திய அரசின் இந்தச் சட்டங்கள் இருக்கிறது.

~*~*~