ஒருபாலீர்ப்பாளர்கள் பற்றிய VCK தலைவர் Dr தொல் திருமாவளவன் அவர்களின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தல் மற்றும் LGBTQIA+ நபர்களின் உரிமைகள் குறித்த VCK கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தல் தொடரபான அறிக்கை 

“காதல் அப்டிங்கறத நம்ம வரையறை எல்லாம் செய்ய முடியாது. வரையறைகளுக்கு அப்பால் உள்ள ஒரு உணர்வு அது. அது மெண்பையானதுன்னு சொல்லலாம், வலிமையானதுன்னு சொல்லலாம். அது பயனுள்ளதுன்னு சொல்லலாம், பயங்கரமானதுன்னு சொல்லலாம். அது தேவையானதுன்னு சொல்லலாம், தேவையில்லாததுன்னு சொல்லலாம். அது எப்படி வேணும்னாலும் நீங்க define பண்ண முடியும். எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒரு உணர்வு அது. இது மனிதகுலத்துக்கு மட்டும் பொதுவான உணர்வு இல்ல. எல்லா உயிரினத்துக்கும் ஒரு பொதுவான பண்பு உண்டு என்றால், அந்த பண்பு ஒற்றைச் சொல்லில் காதல் என்று அழைக்கப்படுகிறது. 

அதுக்கு சில பேர் வெவ்வேறு வரையறைகளைத் தருகிறார்கள் – உண்மைக் காதல், நாடகக் காதல் என்றெல்லாம் சொல்றாங்க. காதல் காதல்தான், அதுல உண்மை நாடகம்னுலாம் எதுவும் இல்ல. உண்மை பொய்.. காதலா இருந்தா அது காதலா இருக்கும், அவ்வளவுதான். 

அந்த உணர்வ யாரும் சொல்லி தூண்டி எல்லாம் உருவாக்க முடியாது. அதுக்குறிய பருவத்துல எப்படி ஒரு மலர் தானாக மலர்கிறதோ, அதைப்போல் காதலும் இயல்பாக மலரக்கூடிய ஒண்ணு. அந்த உணர்வைத் தாண்டி உயிர்மம் இல்லை, உயிர் இடங்களே கிடையாது. அந்த உணர்வைத் தாண்டி, அது இல்லாமல், உயிரினங்கள் இங்கே வாழவே முடியாது. எனவே அப்படிப்பட்ட ஒரு உணர்வுதான் காதல் என்பது.

அதனை வரையறுக்க பலரும் முயற்சித்தார்கள், ஆனால் ஒருவரும் அதை சரியாக இதுவரையில் வரையறுத்ததில்லை, ஏனென்றால், சிலவற்றை உணர்ந்துதான் புரிந்துகொள்ள முடியும் படித்து புரிந்துகொள்ள முடியாது. சிலவற்றை உணர்ந்துதான் அதை விவரிக்க முடியுமே தவிர அந்த விவரணையையும் பிறருக்கு உணர்த்த முடியாது. எனவே காதலை நாம் உணரத்தான் முடியும், அதை எடுத்துச் சொல்லி புரிய வைக்க முடியாது, அப்படிப்பட்ட ஒரு நுட்பமான உணர்வு, மனிதகுலம் இருக்கும் வரை, காதல் வாழ்ந்துகொண்டே இருக்கும்.”

இது ஏப்ரல் 12, 2025 அன்று நடைபெற்ற ஜனநாயகம் கற்போம் மற்றும் மாணவர் பாராளுமன்றம் 2025 மாநாட்டில் திருமாவளவன் என்ற மாணவரின் கேள்விக்கு VCK தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் அளித்த பதிலின் ஒரு பகுதிதான் இது:

அண்ணா வணக்கம். என் பேரு திருமாவளவன். இங்க சட்டக் கல்லூரிலதான் படிக்கிறேன். என்னோட கேள்வி என்னன்னா, அதாவது நீங்க ஒரு ஸ்பீச்ல சொல்லிருப்பீங்க காதல் அப்டிங்றத ஆதி தமிழ் சமூகம் எப்படி define பண்றாங்கன்னாபண்றாங்கன்னா, ‘க்’ + ஆ என்பது ‘கா’ ஆகுறது. அது காதல் அப்டின்னு ஆச்சு. ‘க்’ என்பது மெய், ‘ஆ’ என்பது உயிர். ஒரு மெய்யும் உயிரும் சேர்ந்து உயிர்மெய் ஆவது போல ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து இனப்பெருக்கமாகிதான் ஒரு சமூகம் உருவாகுது அப்டின்னு சொல்லிருப்பீங்க. 

இந்த காலத்துல ஆணுக்கும் ஆணுக்குமே காதல் வருது, பெண்ணுக்கும் பெண்ணுக்குமே காதல் வருது. அத எப்படி பாக்குறது? அது தமிழ் சமூகத்தின் definitionகுள்ள வருதா?”

டாக்டர் திருமாவளவன் அவர்களின் பதில் மேலே கொடுத்தவை மட்டுமல்ல. அவருடைய பதில் தொடங்கியது இவ்வாறுதான்: 

“அத ஆங்கிலத்துல perversion அப்டின்னு சொல்லுவாங்க. *laughs and claps*ஆணுக்கும் ஆணுக்கும் காதல் வந்தா அது perversion. அது இயங்கியலுக்கு முரணான ஒண்ணு.”

நீதி, சமத்துவம் மற்றும் அடிப்படை மனித கண்ணியத்தில் நம்பிக்கை கொண்ட பல்வேறு பாலின அடையாளங்களைக் கொண்ட ஒருபாலீர்ப்புடைய நபர்களாகிய (லெஸ்பியன் மற்றும் கே நபர்களாகிய) நாங்கள், VCK தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரு நபர்களுக்கிடையேயான காதலை “perversion” என்று குறிப்பிட்டு அளித்த இந்த கருத்தால் நாங்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளோம். மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்வில் அளிக்கப்பட்ட இந்த கருத்து சிரிப்பும் கைத்தட்டலும் பெற்றது, வேதனையான ஒரு விஷயம். அதுமட்டுமல்ல இது ஒரு ஆபத்தான செய்தியையும் அனுப்புகிறது. குறிப்பாக, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு தலைவர் இப்படி சொல்வது மிகவும் வேதனையளிக்கிறது.

இந்தியாவில் ஒருபாலீர்ப்புடைய நபர்கள், இன்றளவும் பயத்துடன்தான் வாழ்கிறார்கள். அதுமட்டுமல்ல,  குடும்பம் மற்றும் சமூகத்தில் மட்டுமல்லாமல், நீதிக்காக போராடுவதாக கூறும் அரசியல் மற்றும் பிற செயல்பாட்டு வெளிகளிலும் அவர்கள் ஒடுப்படுவதும் பாகுபாடு செய்யப்படுவதும் தினசரி நிகழ்வு. சமூக நீதிக்காக நிற்கும் மூத்த அரசியல் தலைவர் ஒருவர், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் காதலை இயற்கைக்கு முரணானது என்று முத்திரை குத்துவதைக் கேட்பது வேதனையளிப்பது மட்டுமல்ல, மிகவும் பொறுப்பற்றது மற்றும் அறிவியல் பூர்வமற்றது.  ஏற்கெனவே நிலவி வரும் தவறான புரிதல்கள் வலுவூட்டுவதுடன், LGBTQIA+ நபர்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறையை மேலும் முறைப்படுத்தும அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.

காதல் ஒரு குற்றமல்ல, பால்புதுமை என்பது ஒரு தேர்வல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உட்பட, முன்னணி அறிஞர்கள், உளவியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முற்போக்கு அரசியல் சிந்தனையாளர்கள் ஆகியோர் Dr ஹேவ்லாக் எல்லிஸ் என்ற பிரிட்டிஷ் பாலியல் நிபுணரின் ஆராய்ச்சிப் பணிகளை சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் மேற்கோள் காட்டியுள்ளனர். குறிப்பாக ஒருபாலீர்ப்பின் இயல்பான தன்மை குறித்த விவாதங்களில் இவை பயன்படுத்தப்பட்டுள்ளன. 1930களில், டாக்டர் அம்பேத்கர், ஒருபாலீர்ப்பு ஒரு perversion அல்ல, மாறாக இயற்கையான மாறுபாடாக பார்க்க வேண்டும் என்று வாதிட டாக்டர் எல்லிஸின் ஆராய்ச்சியைப் பயன்படுத்தினார். இது வெறுமனே மனித அனுபவத்தின் ஒரு பகுதியாகும், என்று அண்ணல் அம்பேத்கர் பாம்பே உயர்நீதி மன்றத்தில், சமாஜ் ஸ்வஸ்த்யா வழக்கில் வாத்திட்டார். 

இது ​வெறும் ஒரு கருத்துப் பற்றி​ய பிரச்சனை அல்ல. மாறாக, முக்கியமான​ சில கேள்விகளை​ இது எழுப்புகிறது:

  • தலைவர் திருமாவளவன் லெஸ்பியன் மற்றும் கே மக்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு கருத்தை பொதுவெளியில் வைப்பதற்கு முன்னால், அதைப் பற்றி புரிந்துகொள்ள நேரம் செலவிட்டுள்ளாரா?
  • இவ்வாறான பொதுவெளி அறிக்கைகளின் விளைவாக, குயர் நபர்கள், குறிப்பாக இளைஞர்கள், தனிமை, மனநலப் பிரச்சினைகள் மற்றும் வன்முறையை எதிர்கொள்ள நேரிடும் என்று அவருக்குத் தெரியுமா?
  • இவருடைய கருத்துக்களை, நாம் பல பிரச்சனைகளை சந்தித்து, கஷ்டப்பட்டு பெற்ற உரிமைகளுக்கு எதிராக, பிற்போக்கு சக்திகளால் பயன்படுத்தப்படலாம் என்பது இவருக்குத் தெரியுமா? 
  • அவர் பாகமாக இருக்கும் INDIA கூட்டணி போன்ற அரசியல் கூட்டணிகள், தங்கள் தேர்தல் அறிக்கைகள் மற்றும் பொது உறுதிமொழிகளில் LGBTQIA+ உரிமைகளை தொடர்ந்து ஆதரித்து வருகின்றன என்பது அவருக்குத் தெரியுமா? மேலும் தமிழ்நாட்டில் ஆட்சிபுரியும் திமுக அரசும் சென்னை உயர்நீதிமன்றமும், LGBTQIA+ சமூகத்திற்கு ஆதரவாக முற்போக்கு கொள்கைகளை கொண்டுவர தீவிரமாக பணியாற்றி வருகிறது என்பதும் அவருக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டில்தான் பல முற்போக்கு சமூக இயக்கங்கள் தொடங்கியுள்ளன. இங்கு மட்டும்தான் பிரைட் நிகழ்வு “வானவில்/பால்புது சுயமரியாதை பேரணி” என்றழைக்கப்படுகிறது. இது சுயமரியாதை இயக்கத்தின் மதிப்புகளில் நாம் வேரூன்றியிருக்கும் வலிமையான வெளிப்பாடாகும். இங்குள்ள குயர் சமூகம் அனைவரையும் உள்ளடக்கிய, குர்டுக்குவெட்டு சமூகப் பார்வையுள்ள ஒரு இயக்கத்தை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறது. இது பாலினம், சாதி, வர்க்கம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு முயற்சியாகும்.

ஒரு தலைவர் பொதுவெளியில் ஒரே பாலின காதலை “perversion” என்று அழைக்கும்போது, அது எங்கள் சமூகத்தை வேதனைப்படுத்துவது மட்டுமல்ல, எங்குமே எங்களுக்கு இடம் இல்லை என்றும், அதுவும்  நீதிக்காக நிற்பதாக கூறும் இடங்களில் கூட நாங்கள் பாதுகாப்பற்றவர்கள் என்ற செய்தியையே அனுப்புகிறது. இது கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுவெளிகளில், குறிப்பாக ஏற்கனவே போராடிக் கொண்டிருக்கும் குயர் மாணவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதோடு, அவர்கள் விலக்கிவைக்கவும் வழிவகை செய்கிறது.  மேலும், பாகுபாட்டைத் தூண்டுவதோடு, சில சந்தர்பங்களில், இதுவரை இந்தியாவில் அதிகம் வெளிவராத ஆனவக் கொலைகள் அதிகரக்கவும் வாய்ப்பிருக்கிறது.

விடுதலைக்காக போராடுவதாக கூறும் ஒரு இயக்கம், நாம் யாரை காதலிக்கிறோம் என்ற அடிப்படையில் சில நபர்களை ஒதுக்க முடியாது. சமூக நீதி என்று வந்துவிட்டால், சிலரை மட்டும் தேர்ந்தெடுப்பது சாத்தியமல்ல.  

டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் தமது வார்த்தைகளால் ஏற்பட்ட தீங்கு குறித்து சிந்திக்க வேண்டும். வெறுமனே ஒரு தவறை சரி செய்வதற்காக மட்டுமல்ல, அவருடைய ஆதரவாளர்கள் அவர் ​ பெயரைப் பயன்படுத்தி ஒருபாலீர்ப்பு வெறுப்பை நிலைநிறுத்​தாமல் இருக்கவும், அதை ​உறுதி​யாக அளிப்பதற்காகவும் உண்மையான, ​விஷயத்தைப் புரிந்துகொண்ட பிறகான மன்னிப்பு தேவை. ​அதுமட்டுமல்ல, LGBTQIA+ உரிமைகள் குறித்த ​விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ​நிலைப்பாடு​ பற்றியும், லெஸ்பியன் மற்றும் கே நபர்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்கான உரிமை​ பற்றிய கட்சியின் நிலைப்பாடு பற்றியும் தெரிய வேண்டும்.​

​​அன்புக்கு சட்டபூர்வ​மான மற்றும் அரசியல் ஆதரவு​ அளிப்பதுதான் நீதியாகிறது. அடையாளங்கள் எதுவாக இருந்தாலும் நீதி அனைவருக்கும் சமமாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பது போல, ​அன்பும் காதலும் இருக்க வேண்டும். அப்படித்தான். அது பாகுபாடு காட்​​டாது, காட்டவும் கூடாது.​ இதனால், நீதிக்காக பணியாற்றும் ஒரு கட்சியும் ​அதன் தலைவரும் காதல்​ மற்றும் அன்பு தொடர்பான விசயங்களைக் காரணமாக வைத்துக் கொண்டு​ பாகுபாடு காட்டக்கூடாது​.

குயர் நபர்களின் விடுதலையை நீதிக்கான பரந்த போராட்டங்களிலிருந்து பிரிக்க முடியாதது. பாலின அடையாளம் மற்றும் பாலீர்ப்பிற்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் கண்ணியத்துடன் வாழ முடியும் வரை, சமத்துவத்திற்கான போராட்டம் முழுமையடையாது.

ஆங்கிலத்தில் அறிக்கை

தகவல்: 6 ஜூலை 2025

ஜூலை 6, 2025 அன்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் LGBTQIA+ சமூகத்தின் உரிமைகள் மற்றும் மரியாதையை நிலைநாட்டுவதில் தனது மற்றும் கட்சியின் உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்தார்.